இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான சீனாவுக்கு கண்டனம் தெரிவித்ததற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக தேதிய பொதுச்செயலாளர் பி.முரளிதரராவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக ஏற்பாடு செய்த காணொலி பேரணியில் நேற்று அவர் பேசியதாவது:
உலகின் மிகத்தொன்மையான தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஐ.நா.வில் தமிழின் சிறப்பு குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். பல்வேறு தருணங்களில் தமிழ் மொழி, திருக்குறள் மற்றும் தமிழ் சான்றோர்களின் பெருமைகள் குறித்து பாஜக அரசு இந்தியா மட்டுமின்றி உலக அரங்கில் தொடர்ந்து பறைசாற்றி வருகிறது.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஊழலுக்காக சிறை சென்ற அவருக்கு மோடியைப் பற்றி பேசும் தகுதி இல்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியாவின் பல பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது என்பதை ப.சிதம்பரம் உணர வேண்டும்.
ராஜீவ் காந்தி அறக்கட்டளை சீனாவுடன் என்ன ஒப்பந்தம் போட்டது, இந்த அறக்கட்டளைக்கு சீனா ஏன் நன்கொடை அளித்தது என்ற கேள்விகளுக்கு ராகுல் காந்தியிடம் இருந்து பதில் இல்லை. இந்திய ராணுவ வீரர்கள் இறப்புக்கு காரணமான சீன அரசுக்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பாராட்டுகிறேன். ஆனால், சீன ஆதரவு நிலையில் உள்ள ராகுல் காந்தியை ஸ்டாலின் கண்டிக்கவில்லை.சீனாவுக்கு ஆதரவாக உண்மையை திரித்துக்கூறி மக்களை குழப்பும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.
பாஜக ஆட்சி காலத்தில் ஒரு தமிழ் மீனவர் கூட இலங்கை ராணுவத்தால் கொல்லப்படவில்லை. பாஜக தமிழர் களின் நலன் காக்கும் கட்சி. இவ்வாறு முரளிதரராவ் பேசினார்.
மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
கரோனாவை கட்டுப்படுத்த, தான் சொன்ன ஆலோசனைகள் எதையும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை என்றுதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் அவர் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘கரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதுவரைக்கும் எந்த ஆக்கபூர்வமான ஆலோசனையையாவது சொல்லி இருக்கிறாரா’ என்று கேட்டிருக் கிறார்.
சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும், அனைத்துக் கட்சிகூட்டத்தை கூட்ட வேண்டும், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி, மின் கட்டணச் சலுகை, மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்க வேண்டும். மதுக் கடைகளை மூட வேண்டும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கரோனா பரவத் தொடங்கியது முதல் மக்களின் பாதுகாப்பு கருதி நூற்றுக்கணக்கான ஆலோசனைகளை தமிழக அரசுக்கு வழங்கி வருகிறேன்.
ஆனால், இதில் எதையும் முதல்வர் பழனிசாமி கேட்கவுமில்லை. செய்யவும் இல்லை. எனது ஆலோசனை மட்டுமல்ல, யாருடைய ஆலோசனையையும் கேட்கும்மனநிலையில் முதல்வர் இல்லை. அதனால்தான் தமிழகம் மிக மோசமான பேரழிவைச் சந்திக்க வேண்டியதாயிற்று. இதற்கு முதல்வர் பழனிசாமிதான் காரணம்.
'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் கரோனா ஏற்பட்டது என்று முதல்வர் பழனிசாமி சொல்கிறார். இதற்கு அவரிடம் ஆதாரம் உள்ளதா? அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், அதிமுக எம்எல்ஏக்கள் சிலருக்கு கரோனா வந்ததற்கு யார் காரணம்?
கரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. அதிலிருந்து மக்களை திசை திருப்பவே திமுக மீது முதல்வர் பழிபோட்டு வருகிறார். நோயை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.