டீசல் விலை உயர்வு, லாரி ஓட்டுநர்சம்பள உயர்வு இவற்றால் ஏற்படும்நஷ்டத்தை ஈடுகட்ட 30 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.இல்லையெனில் ஜூலை 10-ம் தேதி முதல் குடிநீர் லாரிகளை இயக்க மாட்டோம் என்று சென்னைக் குடிநீர் வாரிய டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத் தலைவர் பி.எஸ்.சுந்தரம் கூறியதாவது:
கடந்த ஜூன் 8 முதல் 27-ம்தேதி வரை டீசல் விலை ரூ.9 அதிகரித்துள்ளது. மேலும், கரோனா காலத்தில் லாரி ஓட்டுநருக்கு சம்பளஉயர்வு, உணவு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக கூடுதலாக செலவு செய்கிறோம். இதனால் ஒரு லாரிக்கு மாதத்துக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது.
இதற்கிடையே இம்மாதம் 7-ம் தேதியுடன் ஒப்பந்த காலம் முடிவடைந்துள்ள நிலையில், 8-ம் தேதி முதல் அடுத்த ஒப்பந்தம் இறுதியாகும் வரை 30 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றுசென்னை குடிநீர் வாரிய நிர்வாகத்துக்கு பலமுறை கடிதம் அனுப்பினோம். இதுவரை பதில் இல்லை.
இந்நிலையில், ஒப்பந்த லாரிகளுக்காக புதிய டெண்டர் கோருவது கரோனா ஊரடங்கால் ஜூலை 31 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் போடுவதற்கு 2 முதல் 3 மாதம் வரை ஆகும். எனவே, ஜூன்8-ம் தேதி முதல் புதிய வாடகை நிர்ணயம் ஆகும் வரை ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
உதாரணமாக 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி, ஒருநடைக்கு ரூ.400 கொடுக்கின்றனர். 30 சதவீதம் ஊக்கத் தொகையாக ரூ.120 சேர்த்துக் கொடுக்க வேண்டு்ம். இந்த ஊக்கத் தொகையை தராவிட்டால் ஜூலை 10-ம்தேதி முதல் குடிநீர் லாரிகளை இயக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.