சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி, கோவை, தேனி, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் இடியுடன் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில்நேற்று பகலில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக கிண்டி, அண்ணாநகர், ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. திடீரென பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.