ஆதிகேசவன் 
தமிழகம்

கரோனா சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 74 வயது முதியவரை 17 நாட்களாக காணவில்லை: காவல் நிலையத்தில் அவரது மகன் புகார்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட 74 வயது முதியவரைப் பற்றி 17 நாட்களாக எந்தவிதத் தகவலும் இல்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் அவரது மகன் புகார் அளித்துள்ளார்.

சென்னை ஆலந்தூர் முத்தையாரெட்டி தெருவைச் சேர்ந்தவர் ஆதிகேசவன்(74). வளையல் வியாபாரி இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த 10-ம் தேதி அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 161-வதுவார்டு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள் ஆதிகேசவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் போவதாகக் கூறி ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர்.

மறுநாள் தந்தையைப் பார்க்க அவரது மகன் மணிவண்ணன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு விசாரித்தபோது, ஆதிகேசவன் என்ற பெயரில் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த மணிவண்ணன், உடனே இதுகுறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, போலீஸார்விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆதிகேசவனை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் விசாரித்தபோது, ஆதிகேசவன் உட்பட 5 பேரை அன்று அழைத்துவந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் எக்ஸ்-ரே பிரிவில் இறக்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் வசந்தாமணி இதுகுறித்து கூறும்போது, “வயதான நபர் இந்த மருத்துவமனை வளாகத்துக்குள் வரவில்லை. அவர் உள்ளேவந்திருந்தால், அதற்கு சில ஆதாரங்கள் இருந்திருக்கும். கரோனா சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வருபவர்கள் குறித்து மூன்று விதமாக பதிவு செய்யப்படுகிறது. அவற்றில், ஆதிகேசவன் பெயர் பதிவாகவில்லை” என்றார்.

ஆதிகேசவனின் மகன் மணிவண்ணன் கூறும்போது, “சென்னையில் உள்ள கரோனா தனிமை மையங்களில் விசாரித்தும், எனதுதந்தையைக் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. கடந்த 17 நாட்களாக அவரைக் காணவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் என் தந்தையை அழைத்து சென்று தொலைத்து விட்டனர்’’ என்றார்.

SCROLL FOR NEXT