மதுரை மாநகராட்சியல் தெருவுக்கு தெரு ‘கரோனா’ வந்துவிட்டதால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் ‘கரோனா’வுக்கு முதல் உயிரிழப்பு மதுரையில்தான் ஏற்பட்டது. அந்தளவுக்கு இந்த தொற்று நோய் ஆரம்பத்தில் மதுரை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் கொடுத்தது. ஆனால், மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும், மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் தொற்று ஏற்பட்ட குடியிருப்பு பகுதிகளை தனிமைப்படுத்தி
அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேறாதபடிக்கு அவர்களுக்கு தேவையான காய்கறி, பால், குடிநீர் மற்றும் மருந்து மாத்திரைகள் முதற்கொண்டு தெருவுக்கு தெரு தனிக்குழுக்களை நியமித்து வீடு தேடி சென்று வழங்கியது. அதனால், ஆரம்பத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ‘கரோனா’ வேகமாக பரவியபோதும் மக்கள் நெருக்கம் மிகுந்த மதுரை மாநகராட்சியில் கட்டுக்குள்ளாகவே இருந்தது. மதுரை மாவட்டத்தில் ஆரம்பத்தில் சில நாட்கள் ஒன்று முதல் 5 வரையும், சில நாட்கள் அதுவும் கூட இல்லாமலும் ‘கரோனா’ தொற்று ஆமை வேகத்திலே இருந்தது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளும் முழுகுணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
இந்நிலையில் சென்னையில் ‘கரோனா’ எதிர்பாராதவகையில் வேகமாக பரவியதோடு உயிரிழப்பும் அதிகரித்ததால் அச்சமடைந்த மக்கள், அங்கிருந்து இ-பாஸ் பெற்றும், பெறாமலும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். அவர்களை முறையான பரிசோதனைக்குட்படுத்த தமிழக சுகாதாரத்துறை கண்காணிக்கத் தவறியது. அதுபோல், வடமாநிலங்களில் இருந்து வந்த காய்கறி கொண்டு வந்த லாரி டிரைவர்களையும் பரிசோதனை செய்யாமலே காய்கறி சந்தைக்குள் அனுமதித்தனர். அதனால், வடமாநில டிரைவர்கள் மூலம் மதுரை பரவை காய்கறி சந்தை வியாபாரிகளுக்கு பரவியது. அதில், குறைவான எண்ணிக்கையிலே பாதிக்கப்பட்டோர் பட்டியலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
ஆனால், சென்னை கோயம்பேடு போல் தற்போதைய மதுரையின் மோசமான நிலைக்கு பரவை மார்க்கெட்டும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. சென்னையில் இருந்து வந்தவர்கள், பரவை மார்க்கெட் மற்றும் சில நகைக்கடைகளில் வேலைபார்த்தவர்கள் மூலம் மதுரை மாநகராட்சிப்பகுதியில் தற்போது ‘கரோனா’ வீதிக்கு வீதி வந்துவிட்டது.
முன் அங்கொன்றும், இங்கொன்றுமாக வந்த ‘கரோனா’ தொற்று தற்போது மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளில் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில் உள்ளவர்களுக்கே வந்துவிட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வார்டுகளில் தனிமைப்படுத்தும் பகுதிகள் முன்போல் கண்காணிக்கப்படவில்லை. ஒவ்வொரு தெருவுக்கும் ‘கரோனா’ வந்துவிட்டதால் யாருக்கு ‘கரோனா’ இருக்கிறது, இல்லை என்று அறிவதற்கு முன்பே அப்பகுதியை சேர்ந்த மற்றவர்களுக்கு இந்த தொற்று நோய் பரவிவிடுகிறது. கடந்த 25ம் தேதி 204 பேருக்கும், நேற்று முன்தினம் 194 பேருக்கும்
நேற்று 218 பேருக்கும் என்று மதுரை மாவட்டத்தில் ‘கரோனா’ சமூக பரவல் நிலையை அடைந்துள்ளது. இன்று 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மாலை மீடியா புல்லட்டில் அரசு வேறு புள்ளி விவரங்களை அறிவிக்கலாம். நேற்று நிலவரப்படி ‘கரோனா’ பாதிப்பில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு அடுத்து 1,703 பேருடன் மதுரை 4வது இடத்திற்கு வந்துவிட்டது. இதேவேகத்தில் இந்த தொற்று பரவினால் சென்னைக்கு அடுத்த மதுரையில் மதுரை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனை, தியாகராசர் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அரசு விவசாயக் கல்லூரி, தோப்பூர் ஆகிய இடங்களில் சுமார் 2000 படுக்கை வசதிகள் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வார்டுகள் வேமாக நிரம்பி வருவதால் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மதுரையில் பள்ளிகள், திருமணமண்டபங்களில் ‘கரோனா’ வார்டுகள் அமைக்கும் திட்டம் உள்ளது.
மதுரையில் தற்போது ‘கரோனா’வை கட்டுப்படுத்தும் வாய்ப்பு கைநழுவி போய்விட்டதால் தொடர் முழுஊரடங்கு மட்டுமே முழுமையான தீர்வு என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். ஊரடங்கு நீடித்தால் ஏற்கனவே வேலையை இழந்தும், வருமானம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு அரசு போதுமான நிவாரண உதவிகளை வழங்க முன் வர வேண்டும்