திருச்சி பீமநகர். | கோப்புப் படம் 
தமிழகம்

திருச்சியில் முழு ஊரடங்கு அச்சத்தில் தொழிலாளர்கள்:  மாவட்டத்தில் 500-ஐக் கடந்தது கரோனா பாதிப்பு எண்ணிக்கை

ஜெ.ஞானசேகர்

திருச்சி மாவட்டத்தில் தொடக்கத்தில் கரோனா தொற்று குறைவாக இருந்த நிலையில், தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஜூன் 27-ம் தேதி நிலவரப்படி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500-ஐக் கடந்துள்ளது. எனவே, மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் ஜூன் 27-ம் தேதி வரை கரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 501. இதில், இதுவரை 302 பேர் குணமடைந்துள்ள நிலையில், எஞ்சிய 197 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஊரகப் பகுதியைக் காட்டிலும் மாநகரப் பகுதியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாக உள்ளது.

மாநகரில் 341 பேர்..

திருச்சி மாநகராட்சியில் கோட்டம் வாரியாக அரியமங்கலத்தில் 70 பேர், கோ.அபிஷேகபுரத்தில் 91 பேர், பொன்மலையில் 81 பேர், ஸ்ரீரங்கத்தில் 99 பேர் என ஜூன் 27-ம் தேதி வரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 341. இதில், அரியங்கலத்தில் 31 பேர், கோ.அபிஷேகபுரத்தில் 59 பேர், பொன்மலையில் 44 பேர், ஸ்ரீரங்கத்தில் 61 பேர் என 195 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்புகள் போக எஞ்சிய 143 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் ஓரிரு வார்டுகளைத் தவிர எஞ்சிய அனைத்து வார்டுகளிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

ஊரகப் பகுதியில் 160 பேர்..

இதேபோல் லால்குடி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை, முசிறி, மணிகண்டம், மருங்காபுரி, புள்ளம்பாடி, தா.பேட்டை, துறையூர், தொட்டியம், உப்பிலியபுரம், வையம்பட்டி, துவாக்குடி என மாவட்டத்தின் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சி மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் பாதிப்பு நேரிட்ட 160 பேரில் இதுவரை 107 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு போக எஞ்சிய 52 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

சிகிச்சையில் 197 பேர்..

இதன்படி, பாரதிதான் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் உள்ள கரோனா பாதுகாப்பு மையத்தில் 82 பேரும், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 78 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 36 பேரும் என திருச்சி மாவட்டத்தில் 197 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தொடக்கத்தில் பிற மாவட்டங்களைக் காட்டிலும் திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று குறைவாக இருந்து, அதுவும் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. ஏற்கெனவே ஊரடங்கால் வேலைவாய்ப்பின்றி பல்வேறு வழிகளில் அவதிப்பட்ட மக்கள் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்று அச்சமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக தொழிலாளர்கள் கூறும்போது, "ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் அரசு வழங்கிய நிவாரணம் போதுமானதாக இல்லை. உணவைத் தாண்டி ஒவ்வொரு குடும்பத்திலும் பல்வேறு அத்தியாவசிய தேவைகள் உள்ளன. அதை வழக்கமான சம்பாத்தியம் இருந்தாலே நிறைவேற்றுவது கடினம் என்ற நிலையில், ஊரடங்கால் வேலையிழந்துள்ள நிலையில் ஒவ்வொன்றாக கானல்நீராகி வருகின்றன. எனவே, கரோனா வழிகாட்டுதல்களை மீறுவோர் மீது பாரபட்சம் இன்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பதால் மட்டும் நோக்கம் நிறைவேறாது. மக்களைக் காக்கவே ஊரடங்கு என்று கூறும் அரசு, அதை முழுமையாக நிறைவேற்றும் வகையில் பல்வேறு தரப்பினருக்கும் தேவையான முழுமையான நிவாரணத்தை வழங்க வேண்டும். அவ்வாறின்றி ஊரடங்கு பிறப்பித்தால் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்" என்றனர்.

இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் மருத்துவத் துறை அலுவலர்கள் கூறும்போது, “திருச்சி மாவட்டத்தில் தொடக்கத்தில் கரோனா தொற்று குறைவாக இருந்தது. சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமாகவும், அரசின் வழிகாட்டுதல்களை அலட்சியப்படுத்தியவர்கள் மூலமாகவும் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்தது. திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதியைக் காட்டிலும் மாநகரப் பகுதியில் கரோனா தொற்று அதிகரிக்க சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்காததே காரணம். சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அது கரோனா இல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ளும் வரை தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவேளை கரோனா தொற்று அறிகுறியாக இருந்தால் உடனே அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது காவல் துறையினர், மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தாலும் அலட்சியமாக இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். எனவே, மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கரோனாவை விரைவில் ஒழிக்கவும், உயிரைக் காக்கவும் முடியும். இதை உணர்ந்து அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றனர்.

SCROLL FOR NEXT