தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மதுரை மாநகரம் வாகன நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
சென்னையை அடுத்து மதுரையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மதுரை மாநகராட்சி, பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஜூன் 23 நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை ஜூலை 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 6:00 முதல் பகல் 2:00 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் கரோனாவின் தீவிரத்தை உணராமல் மக்கள் வெளியில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி வெளியே நடமாடினர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12:00 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணி வரை எந்த தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பால், மருந்து கடைகள் தவிர்த்து காய்கறி, பலசரக்கு, இறைச்சி, மீன் கடைகள், ஹோட்டல்கள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.
வாகன நடமாட்டம் எதும் இல்லாமல் மதுரை மாநகரம் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்திருந்தது. பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கினர். புறநகர் பகுதிகளில் குறைந்தளவில் வாகன நடமாட்டம் இருந்தது.
முக்கிய சந்திப்புகளில் போலீஸார் தடுப்பு ஏற்படுத்தி வாகன நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். கரோனா பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ஒலி பெருக்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.