காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்ததாக கராத்தே தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்னர். பின்னார் கடுமையாகத் தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தூத்துக்குடி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.
மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் எதிர்ப்பைக் காட்ட வணிகர்கள் கடையடைப்பை நடத்தி வருகின்றனர். திமுக எம்.பி. கனிமொழி தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு இதுகுறித்துக் கடிதம் எழுதியுள்ளார்.
பலத்த எதிர்ப்பை அடுத்து உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ஹரி உட்பட 4 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஆய்வாளர் ஸ்ரீதரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவியை கனிமொழி எம்பி நேரில் சென்று வழங்கினார், அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்வை ராகுல் காந்தி முதல் திரையுலக, கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கண்டித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் இன்று கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரை தொலை பேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை அவரது நெருங்கிய நண்பர் காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் ரஜினி தரப்பிலோ, ரஜினி மக்கள் மன்றம் தரப்பிலோ இதுகுறித்த தகவல் எதுவும் இல்லை.