கரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் சிலர் மன அழுத்தத்துக்கு ஆளாகித் தற்கொலைக்கு துணியும் சம்பவங்கள் கரோனாவை ஒழிக்கப் போராடிக் கொண்டிருக்கும் மருத்துவப் பணியாளர்களை மேலும் கவலைகொள்ளச் செய்திருக்கிறது.
நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் ஹரிசிங் பிரபலமான மனிதர் என்பதால் அவரது தற்கொலை அனைத்து மட்டத்திலும் அதிர்வலைகளை படரவிட்டிருக்கிறது. ஆனால், கரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் பலரும் சரியான புரிதல் இல்லாமல் தற்கொலை எண்ணத்தைத் தங்களுக்குள் ஓடவிட்டுப் பார்ப்பதாக களத்தில் நிற்கும் மருத்துவர்கள் கலங்கிப் போய் சொல்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியரும் துறைத் தலைவருமான டாக்டர் தீபா. சென்னையில் உள்ள கரோனா சிறப்பு வார்டுகளில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு மன இறுக்கத்தைப் போக்கும் விதமாக யோகா உள்ளிட்ட பயிற்சிகளை அளிப்பதுடன் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை மருந்துகளையும் வழங்கி பலரையும் குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருக்கும் தீபா, “சென்னை மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளில் இதுவரை சுமார் 4 ஆயிரம் பேரைச் சந்தித்து ஆற்றுப்படுத்தி இருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டத்தை அவமானமாக, அசிங்கமாக நினைப்பதை என்னால் உணரமுடிந்தது. இப்படியானவர்களில் சிலர் தற்கொலை எண்ணத்தில் இருந்ததைக் கண்டுபிடித்து அவர்களை அதிலிருந்து மீட்டிருக்கிறோம்” என்கிறார்.
இதுகுறித்து மேலும் பேசியவர், “கரோனா என்பது ஒரு வைரஸ் தொற்று. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருமே இறந்துவிடுவார்கள் என்ற தவறான எண்ணமும் தேவையற்ற பயமும் மக்கள் மத்தியில் நிறையவே இருக்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல. தொற்றுக்கு ஆளானவர்களால் மற்றவர்களுக்கும் தொற்றுப் பரவலாம் என்பதால்தான் அரசு அவர்களைத் தனிமைப்படுத்துகிறது. தனிமைப்படுத்தி வைப்பதாலேயே நமக்கு ஏதோ ஆபத்தான நோய் வந்துவிட்டது போலிருக்கிறது என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை.
நான் கவுன்சலிங் கொடுத்த நபர் ஒருவர், ‘எனக்குக் கரோனா இருப்பதாக வெளியில் தெரிந்தால் அசிங்கம். உறவினர்களுக்குத் தெரிந்தால் தவறாகப் பேசுவார்கள். என்னையும் எங்கள் குடும்பத்தையும் ஒதுக்கி விடுவார்கள். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது தற்கொலை செய்துகொள்ளலாம் போல இருக்கிறது’ என்றார்.
சிகிச்சையில் இருக்கும் நிறையப் பேருக்கு இதுபோன்ற மன அழுத்தம் இருக்கிறது. தங்கள் வீட்டு வாசலில் மாநகராட்சியினர் தகடு அடித்து விடுவார்களே என்று நினைத்தே பலபேர் மன இறுக்கத்தில் இருப்பதை என்னால் உணரமுடிந்தது. தனிமையில் இருப்பதும் அவர்களுக்குக் கடுமையான மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. சிலபேர், அருகிலுள்ள மற்ற நோயாளிகளைப் பார்த்து தங்களுக்கும் ஏதும் ஆகிவிடுமோ என்று பதறுகிறார்கள்.
இப்படி இருப்பவர்கள், ‘எங்களை வீட்டுக்கு அனுப்புங்கள்; எதுவானாலும் அங்கேயே நடக்கட்டும்’ என்று அடம்பிடிக்கிறார்கள். எந்த அறிகுறியும் இல்லாமல், ‘அசிம்ப்டமேட்டிக்’ நிலையில் இருப்பவர்கள், ‘எனக்கு எதுவுமே இல்லையே... எதற்காக இங்கே அடைத்து வைத்திருக்கிறீர்கள்?’ என்று சண்டைபிடிக்கிறார்கள். தங்களை மருத்துவர்கள் தனிமைப்படுத்தி வைத்துக் கொடுமைப்படுத்துவதாக அவர்கள் கோபப்படுகிறார்கள்.
இவர்களின் பயத்தையும் மன இறுக்கத்தையும் போக்க மனநல மருத்துவர்கள் மற்றும் எங்களைப் போன்றவர்கள் மூலம் அரசு உரிய ஆற்றுப்படுத்துதல் செய்து வருகிறது. ஆற்றுப்படுத்தும் முயற்சியில் நான் ஒரு பெரியவரிடம் பேசியபோது, ‘என்னை யாரோ பிடித்து அழுத்துவதுபோல் இருக்கிறது. பாத்ரூமுக்குப் போனால் பின்னால் இருந்து யாரோ என்னை பிடித்துத் தள்ளுகிறார்கள். அதனால் பாத்ரூமுக்குப் போகவே பயமாக இருக்கிறது’ என்று சொன்னார். இதெல்லாம் நமது உடம்பில் இருக்கும் செல்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காததால் வரும் பிரச்சினைதான். இதை அவருக்கு உரிய முறையில் எடுத்துச் சொல்லி புரியவைத்தேன். அவருடைய மன திருப்திக்காக அவரது படுக்கையை வேறு இடத்துக்கு மாற்றிக் கொடுத்தோம் அதன்பிறகு அவர் நார்மலாகிவிட்டார்.
இவரைப் போல தங்களுடைய பிரச்சினைகளை மனம் திறந்து மற்றவர்களிடம் பேசினாலே பாதி நோய் குணமாகிவிடும். ஆனால், பலபேர் அப்படிப் பேசமறுக்கிறார்கள். வீட்டிலிருந்தோ உறவுகளிடமிருந்தோ போன் வந்தால்கூட எடுத்துப் பேச தயங்குகிறார்கள். போனை எடுத்துப் பேசினால், ’உங்களுக்கு கரோனா வந்துவிட்டதாமே’ என்று மற்றவர்கள் கேட்பார்களோ என்ற பயம் அவர்களுக்கு. கேட்டால் என்ன, ‘ஆமாம், எனக்கு கரோனா வந்துவிட்டது. இப்போது சிகிச்சையில் இருக்கிறேன். சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிடுவேன்’ என்று கரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் சொல்லப் பழக வேண்டும். அப்போதுதான் தேவையற்ற மனக் குழப்பத்திலும் மன இறுக்கத்திலும் இருந்து வெளியில் வரமுடியும். தற்கொலை உள்ளிட்ட கெட்ட எண்ணங்கள் தங்களுக்குள் எழாமல் தட்டிவிடமுடியும்.
யோகாவில் நாங்கள் தரும் யோக நித்ரா பயிற்சியில் கரோனா தொற்றாளர்களின் ஆழ்மனதுடன் பேசி இதைத்தான் நாங்கள் அவர்களுக்குப் புரியவைத்துக் கொண்டிருக்கிறோம். இன்னொரு முக்கியமான விஷயம்... தண்ணீர் குடிப்பது. நமது உடம்பானது 70- 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருக்க உடம்பில் தண்ணீரின் அளவு சரியாக இருப்பதும் முக்கியக் காரணம். சராசரியாக நாம் தினமும் மூன்று லிட்டர் தண்ணீருக்குக் குறையாமல் குடிக்க வேண்டும், அப்போதுதான் உடற் சோர்வு ஏற்படாமல் இருக்கும்.
நமது உடம்பில் கழிவுகள் தேங்கினால் அது கிருமிகள் ஊட்டமாக வளர, உரமாகிவிடும். நமது உடம்பின் கழிவுகளை வெளியேற்ற வேண்டுமானால் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படிக் குடிக்கும்போது கழிவுகள் வெளியேறி நமது உடம்புக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன் நமக்குள்ளே நேர்மறையான எண்ணங்கள் பிறக்கின்றன. இதுவே நம்மை எந்த நோயும் அண்டவிடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த மூன்று மாத கால எனது அனுபவத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நான் கவனித்தேன். கரோனா வார்டில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு உதவிகள் செய்வதற்காக உறவினர்கள் யாராவது ஒருவர் மருத்துவமனை வளாகத்தில் இருக்கிறார்கள். 70 வயதைக் கடந்த முதியவர் ஒருவருக்குக் கரோனா தொற்று. அவருக்கு உதவுவதற்காக அவரது மனைவியும் மருத்துவமனை வளாகத்தில் இருந்தார். ‘இந்த வயதில் நீங்கள் எதுக்குமா இங்கே வந்தீர்கள்... உங்களுக்குப் பிள்ளைகள் யாரும் இல்லையா?’ என்று கேட்டேன். ‘பிள்ளைகள் எல்லாம் இல்லைமா... அவருக்கு நானும் எனக்கு அவரும்தான்’னு அந்தம்மா சொன்னாங்க.
‘வயசானவங்களாச்சே இவங்களுக்கும் டெஸ்ட் எடுத்துருங்க’ன்னு சொல்லிருந்தேன். டெஸ்ட் எடுத்துப் பார்த்தா அந்தம்மாவுக்கு ‘நெகட்டிவ்’னு வருது. இதேமாதிரி இன்னொரு அம்மாவுக்கு ஏற்கெனவே கைகால் செயலிழந்து போயிருந்தது. வாஷ் ரூமுக்குக்கூட அந்தம்மாவை யாராச்சும் தூக்கிட்டுத்தான் போகணும். மருத்துவ பணியாளர்கள் இதையெல்லாம் செய்யமுடியாது. ஆனா அந்தம்மாவோட 24 வயது மகன், ‘அம்மாவ நான் பாத்துக்கிறேன்’ன்னு சொல்லிக் கரோனா வார்டிலயே இருந்தார். நிச்சயம் அவருக்கும் கரோனா தொற்று இருக்கும் என நினைத்து டெஸ்ட் எடுத்துப் பார்த்தால் அவருக்கும் ‘நெகட்டிவ்’.
ஆக, கரோனா வார்டுக்குள்ளேயே புழங்கினாலும் தொற்று எல்லோரையும் தொட்டுவிடாது. யாருக்கெல்லாம் உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறதோ அவர்களைத்தான் கரோனா வைரஸ் எளிதில் தொற்றுகிறது. இதைப் புரிந்து கொண்டு நாம் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திக் கொள்வோம். தேவையற்ற மன இறுக்கத்தைத் தவிர்த்து கரோனா வந்தாலும் அதை எளிதில் எதிர்கொண்டு சமாளிக்கப் பழகிக்கொள்வோம்” என்றார் மருத்துவர் தீபா.