தமிழகத்தில் அதிவேக இணைய இணைப்பு வழங்கும் பாரத் நெட் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 12,524 கிராமங்களிலும் அதிவேக இணைய இணைப்பு தருவதற்காக பாரத் நெட் என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1,950 கோடியாகும். இத்திட்டத்துக்கு ‘டேன்பிநெட்’ என்ற பெயரில் கருவிகள் கொள்முதலுக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.
இதில் விதிகளை மீறி ஒரே நிறுவனத்துக்கு கருவிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஒருசில நிறுவனங்களும் அறப்போர் இயக்கமும் புகார் தெரிவித்தன. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பாக தங்கள் கண்டனங்களை பதிவு செய்தன.
நீதிமன்றத்தில் வழக்கு
இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் இல்லை என்பதால் புகார் முடித்து வைக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது. இதையடுத்து, வழக்கை ஆர்.எஸ்.பாரதி திரும்ப பெற்றார்.
இந்நிலையில், ஒப்பந்த விதிகள் முறையாக பின்பற்றப்பட வில்லை என்று கூறி, தமிழக அரசின் பாரத் நெட் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்த விதிகளில் உள்ள குறைகளை களைந்து மீண்டும் ஒப்பந்தம் கோரும்படியும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, ‘‘மத்திய அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மறு ஒப்பந்தம் கோரப்பட்டு திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்’’ என தெரிவித்துள்ளார்.