தமிழகம்

மவுலிவாக்கம் கட்டிட விபத்து வழக்கு: மு.க.ஸ்டாலின் கூடுதல் மனு தாக்கல் - விசாரணை நவம்பர் 17-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

மவுலிவாக்கம் 11 மாடி கட்டிட விபத்து வழக்கில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மூன்றாவதாக கூடுதல் மனு வொன்றைத் தாக்கல் செய்துள் ளார். வழக்கு விசாரணை வரும் நவம்பர் 17-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை அருகேயுள்ள மவுலிவாக்கத்தில் நடந்த 11 மாடி கட்டிட விபத்தில் 61 பேர் பலியானார்கள். 27 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டிராபிக் ராமசாமி ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடையே மேற்கண்ட சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. அவரும் விசாரணை அறிக்கையை அரசிடம் அளித்து விட்டார். கடந்த வாரம் இந்த அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் இவ்வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மனுவொன்றைத் தாக்கல் செய்து வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

மவுலிவாக்கம் கட்டிட விபத் துக்கு காரணமான விதிமீறல்கள் குறித்து விசாரணை கமிஷன் ஆய்வு செய்யவில்லை. அதிகாரி களின் அலட்சிய போக்கு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஒவ்வொரு நிலையிலும் கட்டிடத்தை ஆய்வு செய்ய வேண்டியது அதிகாரிகளின் கடமை ஆகும். அதுபற்றி நீதிபதி ஆய்வு நடத்தவில்லை. அதிகாரி களைக் காப்பாற்றும் வகையி லேயே விசாரணை அறிக்கையில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பில்டர் மற்றும் இன்ஜினீயர்களை மட்டும் குறை கூறியுள்ளார்.

விசாரணை கமிஷன் அறிக்கை 900 பக்கங்கள் கொண்டது. ஆனால், சட்டப்பேரவையில் 242 பக்கங்கள் கொண்ட அறிக்கை மட்டும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நடுவில் சில பக்கங்களைக் காணவில்லை.

இவ்வாறு வில்சன் கூறினார்.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ.) சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் இப்போதுதான் மனு தாக்கல் செய்துள்ளார். அதற்கு பதில் அளிக்க கால அவகாசம் தேவை என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

நீதிபதி ரகுபதி விசாரணை கமிஷன் அறிக்கை கடந்த மாதம் 25-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மனுதாரர் 3-வதாக கூடுதல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்குப் பதில் அளிக்க கால அவகாசம் தேவை என்று சிஎம்டிஏ வழக்கறிஞர் கோரியுள்ளார். இந்த மனுவுக்கு பதில் அளிக்க விருப்பம் உள்ளவர்கள் 3 வாரத்தில் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT