உயிர் குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறி வருகிறதா? அப்பாவி மக்களை காப்பாற்றாமல் தவறு செய்பவர்களை முதல்வர் காப்பாற்றுகிறாரா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த பென்னிக்ஸ் அவரது தந்தை கடையை மூட தாமதமாவதை காரணம் காட்டி கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதில் மரணமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சம்பந்தப்பட்ட 2 எஸ்.ஐக்கள் உள்ளிட்ட 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டித்தன தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, தற்போது இந்த நிகழ்வு என போலீஸ் மீது கடும் கண்டனம் வலுத்த நிலையில் மேலும் ஒரு சம்பவமாக தொழிலாளி ஒருவர் போலீஸ் தாக்குதலில் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்ததாக வெளியான தகவலை வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:
“#JUSTICEFORJAYARAJANDBENNIX ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதி கிடைக்காத நிலையில் எட்டயபுரம் கட்டடத் தொழிலாளி கணேசமூர்த்தி போலீசாரால் தாக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார்.
உயிர்குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது. அப்பாவி மக்களைக் காப்பாற்றாமல் தவறு செய்பவர்களை காப்பாற்றுகிறாரா முதல்வர்?”
இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.