தமிழகம்

ஊராட்சிக்கான நிதியில் நகராட்சியில் பூங்கா: சர்ச்சையில் ஊரக வளர்ச்சித்துறை

இ.ஜெகநாதன்

சிவகங்கையில் ஊராட்சிக்கான நிதியை பயன்படுத்தி நகராட்சி பகுதியில் ஏற்கெனவே பூங்கா இருந்த இடத்திலேயே மீண்டும் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஊரக வளர்ச்சித்துறை சர்ச்சையில் சிக்கியுள்ளது.

மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை சார்பில் ரூர்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கிராமப் பகுதிகள் நகருக்கு இணையாக மாற்றப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் வாணியங்குடி, காஞ்சிரங்கால், சக்கந்தி, முத்துப்பட்டி, இடையமேலூர், கொட்டகுடி கீழ்பாத்தி, சோழபுரம் ஆகிய 7 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.

இந்த ஊராட்சிகளில் பல கோடி ரூபாயில் சாலை, குடிநீர், பூங்கா, கல்வி நிறுவனங்கள் மேம்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காஞ்சிரங்கால் ஊராட்சியில் சிறுவர் பூங்கா, விளையாட்டு திடல் நடைபாதை அமைப்பதற்காக ரூ.29.42 லட்சம் ஒதுக்கப்பட்டது.

தற்போது அந்த நிதியில் சிவகங்கை நகராட்சி பகுதியான மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஏற்கனவே சிறுவர் பூங்கா அமைந்துள்ள இடத்தில் மீண்டும் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஊராட்சிக்கான நிதியை ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் நகராட்சி பகுதியில் பயன்படுத்துவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊராகவளர்ச்சித்துறை ஊழியர்கள் கூறுகையில், ‘ உயரதிகாரிகள் வற்புறுத்தலால் பூங்கா அமைக்கப்படுகிறது,’ என்று கூறினார்.

SCROLL FOR NEXT