சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்தினருக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆறுதல் கூறினார்.
இன்று மாலை சாத்தான்குளத்துக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், சிறையில் மரணமடைந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் மூன்று மகள்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காவல் நிலையத்துக்கு விசாரணை என்று அழைத்துச் சென்ற வியாபாரிகளின் நிலை அனைவருக்கும் தெரியும்.காவல்துறையினரின செயலைக் கண்டித்து திமுக தலைவர் அறிக்கையும், நிதியும் அளித்துள்ளார்.
திமுக இளைஞரணி சார்பில் உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்தபோது அவர்கள் சொன்ன வார்த்தைகள் பயமாகவும், பதற்றமாகவும் உள்ளது. இரண்டு பேரை அடித்து கொலை செய்ததற்கு அதிமுக அரசு தான் பொறுப்பேற்கவேண்டும்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளிவராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சு திணறலாலும், ஜெயராஜ் காய்ச்சல் காரனமாகவும் உயிரிழந்தார் என முதல்வர் சொன்னது எதன் அடிப்படையில் எனத் தெரியவில்லை.
டாஸ்மாக் கடைகளைத் திறந்துள்ளனர். அங்கு சமுக இடைவெளி, முகக்கவசம் என எதும் இல்லாத சூழலில் போலீஸார் கண்டுகொள்ளவது கிடையாது. ஆனால் வியாபாரிகளை தாக்குகின்றனர்.
இனிமேல் இதுபோன்ற இன்னொரு சம்பவம் நடக்க கூடாது என்பது தான் திமுகவின் கருத்து. யார் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும். முறையான விசாரணை நடத்தவில்லை என்றால் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி திமுக வழக்கு தொடரும் என்றார் அவர்.