ஆரிமுத்து மோட்டூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பசுமை வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில். 
தமிழகம்

பத்திரப்பதிவு, வணிகவரித் துறையில் வருவாய் இல்லாமல் தத்தளிக்கிறோம்: அமைச்சர் கே.சி.வீரமணி கவலை

வ.செந்தில்குமார்

தமிழகத்தில் பத்திரப்பதிவுத் துறை, வணிகவரித் துறையில் வருவாய் இல்லாமல் தத்தளித்து வருகிறோம் என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஆரிமுத்து மோட்டூர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்காகக் கட்டப்பட்டுள்ள 24 பசுமை வீடுகளைப் பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைத்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.சி.வீரமணி கூறும்போது, ‘‘ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நோய்த்தொற்று அதிகமாகி வருவதால் போகப்போக கட்டுப்பாடுகள் அதிகமாக விதிக்கும் சூழல் ஏற்படும். இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் நோயை ஒழிப்பதில் சிரமம் ஏற்படும் என்பதுடன் சவாலாக மாறும். கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடிவெடுக்க வாய்ப்புள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் விரைவில் கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும் ஊரடங்கை அமல்படுத்த, மாவட்ட அமைச்சர் என்ற முறையில் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். வேலூரில் கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று, சென்னையில் இருந்து வந்தவர்களால் அதிகமாகியுள்ளது.

தமிழகத்தில் பத்திரப்பதிவுத் துறை, வணிகவரித் துறையில் வருவாய் இல்லாமல் தத்தளித்து வருகிறோம். இந்த இரு துறைகளில் வருவாய் இருந்தால்தான் அரசை நடத்த முடியும் என்ற சூழல் உள்ளது. ஊரடங்குக்குப் பிறகும் கூட எதிர்பார்த்த அளவு இல்லை. 30 சதவீதம் வருவாயைக்கூட அடைய முடியவில்லை’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT