தூத்துக்குடியில் டீக்கடை உரிமையாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து டீக்கடைகளையும் அடைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை 789 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி விஇ சாலையில் அந்தோணியார் ஆலயம் அருகேயுள்ள ஒரு டீக்கடை உரிமையாளருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்தக் கடை மூடப்பட்டது.
மேலும் அவரது வீடு உள்ள மகிழ்ச்சிபுரம் பகுதி மூடப்பட்டு, நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விஇ சாலையில் சுகம் ஹோட்டல் எதிரே வசித்து வரும் கிராம உதவியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் அந்த பகுதியில் உள்ள 2 டீக்கடைகளுக்கு அடிக்கடி செல்வாராம். இதனால் அந்த இரு டீக்கடைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில், தூத்துக்குடி நகரில் உள்ள டீக்கடைகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம், கூட்டமாக நின்று டீ குடிக்கின்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து தூத்துக்குடி நகரில் உள்ள அனைத்து டீக்கடைகளையும் மறு அறிவிப்பு வரும் வரை அடைக்க மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.