ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகளை ஈர்க்கும் இலக்குடன் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
உலகளாவிய முதலீடுகளை தமிழகத்துக்கு அதிக அளவில் ஈர்க்கும் விதமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக அரசு சார்பில் வரும் 9,10 தேதிகளில் நடத்தப்படுகிறது. ரூ.1 லட்சம் கோடிக்கு மேலான இலக்குடன் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தப்படும் இம்மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார். அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். மாநாட்டில் கண்காட்சி, கருத்தரங்கம், முதலீட்டாளர்கள் சந்திப்பு, புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைப்பது போன்றவை நடக்கின்றன.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருகின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் வருவார்கள் என அரசு எதிர்பார்க்கிறது. அவர் களை வரவேற்கும் விதமாகவும், தமிழகத்தின் பெருமைகளை எடுத்துக் கூறும் வகையிலும், சென்னை விமான நிலையத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
மாநாட்டில் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்கள், கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பங்கேற்பவர்கள் ஆகியோர் பதிவு செய்தபோதே, அவர்களுக்கான தங்கும் வசதிகள், போக்குவரத்து வசதிகள், கட்டணங்கள் குறித்த தகவல்கள் பிரத்யேக கைபேசி செயலி மூலம் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சிரமமின்றி மாநாட்டு வளாகத்துக்கு வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநாடு நடக்கும் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கருத்தரங்கம், கண்காட்சிக்கான அரங்க ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்துவருகின்றன. 2 நாட்களிலும் 10 ஆயிரம் பேர் பங்குபெறும் அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வர்த்தக மையம் அருகில் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டுக்கு முந்தைய 2 நாட்கள் மற்றும் அடுத்த 2 நாட்களில் சென்னை அருகில் உள்ள தொழிற்பேட்டைகள், தொழிற்பூங்காக்களை முதலீட்டாளர்கள் பார்வையிடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் உள்ள சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக குறுகலாக மாறிய சாலைகள் முடிந்தவரை விரிவு படுத்தப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. முதலீட்டாளர்களைக் கவரும் விதமாக பிரதான சாலை கள் முழுவதும் முதலீட்டாளர் மாநாடு குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு வளாகம், முதலீட் டாளர்கள் செல்லும் சாலைகள் ஆகியவற்றை அமைச்சர்கள், தொழில்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மாநாடு தொடக்கம் மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார். தவிர, உலகின் பல நாடுகளில் இருந்து முதலீட்டாளர்களும் வருவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.