பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் ஒரே நாளில் 87 பேருக்குக் கரோனா தொற்று உறுதி; மேலும் ஒரு மூதாட்டி உயிரிழப்பு: இறப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 87 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 619 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆகவும் அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், வெளிநாட்டிலிருந்தும், வெளிமாநிலத்தில் இருந்தும் வந்தவர்களால் புதுச்சேரியில் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதேபோல் மேட்டுப்பாளையத்தில் உள்ள முகக்கவசம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் புதிய உச்சமாக இன்று (ஜூன் 27) ஒரே நாளில் 87 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 619 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 388 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், முத்தியால்பேப்டையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் இன்று உயிரிழந்தார். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 221 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மோகன்குமார்: கோப்புப்படம்

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று கூறும்போது, "புதுச்சேரியில் நேற்று 517 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் இன்று 87 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 63 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 9 பேர் ஜிப்மரிலும், காரைக்காலில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் ஊரடங்கைத் தளர்த்திய பிறகுதான் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. மேலும், சென்னையில் ஜூன் 19 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவித்ததால், அங்கிருந்து நிறைய பேர் புதுச்சேரி, காரைக்காலுக்கு வந்துள்ளனர். இதனாலும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இன்று 'பாசிட்டிவ்' வந்தவர்களில் 42 பேர் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனத்தில் புதிதாக 9 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனத்தால் நேரடியாகவும், தொடர்பு மூலமாகவும் 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், எம்ஆர்எப் மற்றும் செக்யூரிட்டி நிறுவனத்தால் 9 பேருக்கு 'பாசிட்டிவ்' வந்துள்ளது. 3 பேர் தமிழகத்தில் இருந்து வந்தவர்கள். மற்றவர்களுக்கு எவ்வாறு தொற்று வந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

மேலும், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டிக்கு ஏற்கெனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மூளையில் சிறிய பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்தன. அவருக்குக் கரோனா 'பாசிட்டிவ்' உறுதி செய்யப்பட்டு கடந்த 16 ஆம் தேதி இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 619 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 225 பேர், ஜிப்மரில் 90 பேர், 'கோவிட் கேர்' சென்டரில் 33 பேர், காரைக்காலில் 36 பேர், ஏனாமில் ஒருவர், மாஹே பிராந்தியத்தில் ஒருவர், பிற பகுதியில் 2 பேர் என மொத்தம் 388 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 14 பேர், ஜிப்மரில் 4 பேர் என மொத்தம் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 221 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 14 ஆயிரத்து 689 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 13 ஆயிரத்து 908 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. 216 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன.

பொதுமக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, தனிமனித சுகாதாரம் கடைப்பிடிக்க வேண்டும். இந்த மூன்றையும்தான் பிரதமரும் வலியுறுத்துகிறார். இவைதான் மிகவும் எளிதான, நூறு சதவீதம் உறுதியான கரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் ஆகும். இதனைப் பொதுமக்கள் பின்பற்றினால் புதுச்சேரி கரேனா இல்லாத மாநிலமாக மாறும்" எனத் தெரிவித்தார்.

இதனிடையே, புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் 35 வயது மதிக்கத்தக்க ஊழியருக்குக் கரோனா தொற்று உறுதியானது. உருளையன்பேட்டை பகுதியைச் சேர்ந்த அந்த நபர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து முதல்வர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அலுவலக அறை மூடப்பட்டது. மேலும், முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யவும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

SCROLL FOR NEXT