விவசாயிகளிடமிருந்து நேரடியாக காய்களை விலைக்கு வாங்கி அதனைப் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் தன்னார்வலர்கள். 
தமிழகம்

ஊரடங்கால் விலை கிடைக்காத விளைபொருட்களுக்கு கைகொடுத்த 'மக்கள் பாதை'; விவசாயிகளிடமிருந்து வாங்கி எளியோருக்கு இலவசமாக வழங்கும் தன்னார்வ அமைப்பினர்

வி.சுந்தர்ராஜ்

கரோனா ஊரடங்கால் விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமலும், அழுகும் பொருட்களை என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்த விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் 'மக்கள் பாதை' என்ற தன்னார்வ அமைப்பினர் கைகொடுத்து, விளைபொருட்களை உரிய விலை கொடுத்து வாங்கி அதனை ஏழை, எளியோருக்கு இலவசமாக இன்றும் வழங்கி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி ஆகிய பகுதிகளில் ஆற்றுப்படுகை அதிகமாக இருப்பதால், அப்பகுதியில் கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், வாழை, கீரை ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

சம்பா சாகுபடி பிப்ரவரி மாதத்தில் நிறைவடைந்ததும் வயல்களில் காய்கறிகளைப் பயிரிடுவது வழக்கம். அவ்வாறு பயிரிட்ட காய்கறிகளை அறுவடை செய்து விற்பனை செய்யும் நேரத்தில்தான் கரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் விவசாயிகள் காய்களைப் பறித்து சந்தையில் விற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். உள்ளூர் சந்தைகள் மட்டுமே செயல்பட்டதால் குறைவான விலைக்கு வியாபாரிகள் வாங்கினர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஐஏஎஸ் அதிகாரியான சகாயத்தின் வழிகாட்டுதலோடு செயல்படும் 'மக்கள் பாதை' என்ற தன்னார்வ அமைப்பினர் களத்தில் இறங்கினர். இந்த அமைப்பினர் விவசாய நிலங்களுக்கே சென்று அங்குள்ள காய்களை விலை கொடுத்து வாங்கி, அதனை கரானோ ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி அவதிப்பட்ட ஏழை, எளியோருக்கு காய்களை மட்டுமின்றி அத்தியாவசியப் பொருட்களையும் சேர்த்து வழங்கி வருகின்றனர்.

அத்தியவாசியப் பொருட்களைப் பொதுமக்களுக்கு வழங்கும் தன்னார்வலர்.

இதுகுறித்து 'மக்கள் பாதை' அமைப்பின் தஞ்சாவூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.கபில் கூறும்போது, "தஞ்சாவூர் மாவட்டத்தில் எங்கள் அமைப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். கரோனா ஊரடங்கின்போது விவசாயிகள் விளைபொருட்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து உடனடியாக நாங்கள் களத்தில் இறங்கி விவசாயிகளிடம் உரிய விலை கொடுத்து காய்களை வாங்கினோம். அந்தக் காய்களோடு சுமார் 800 ரூபாய் மதிப்பில் அத்தியாவசியப் பொருட்களையும் சேர்த்து, ஊரடங்கால் வேலையில்லாமல் முடங்கியவர்கள், கணவரை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வருகிறோம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2,000 கிலோ காய்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ளோம். காய்களை விற்பனை செய்ய முடியவில்லை என எங்களை விவசாயிகள் அணுகும்போது, அவர்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம். ஒரு சில பெரியவர்களும் அத்தியாவசியப் பொருட்களை எங்களிடம் வழங்கினர். அதனை உரியவர்களுக்கு கொண்டுபோய் சேர்த்து வருகிறோம். எங்களது இந்தச் சேவைப் பணி தற்போதும் தொடர்கிறது. இதுவரை சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலிவடைந்தவர்களுக்கு காய்களும், அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.

SCROLL FOR NEXT