பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

நாமக்கல் அருகே சோதனைச்சாவடியில் லஞ்சம் வாங்கிய ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம்

கி.பார்த்திபன்

சோதனைச்சாவடியில் லஞ்சம் பெற்றுக் கொண்டு வெளிமாவட்ட வாகனங்களை அனுமதித்த ஆயுதப்படை காவலரை நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரைக் கண்காணிக்க நாமக்கல் மாவட்ட எல்லையில் 18 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் காவல் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையான வளையப்பட்டி அருகே எம்.மேட்டுப்பட்டியில், சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவல் துறையினர் அவ்வழியாக வரும் வெளிமாவட்டத்தினரைச் சோதனை செய்யாமல் அனுமதிப்பதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு நடத்திய விசாரணையில் புகார் உண்மையெனத் தெரிந்தது. இதையடுத்து, அங்கு பணிபுரிந்த ஆயுதப்படை காவலர் பிரபுதேவாவை (30), காவல் கண்காணிப்பாளர் அருளரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT