பாஜக நிர்வாகியை மிரட்டியதாக மதுரை திமுக எம்எல்ஏ. பி.மூர்த்தி உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்த நிலையில், எம்எல்ஏ. மூர்த்தி தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
என் உயிரினும் மேலான உறவுகளே…
உங்களில் ஒருவனாகிய பி.மூர்த்தி எனும் நான் திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளேன்.
நான் 41 ஆண்டுகளுக்கும் மேலாகத் திராவிட இயக்கக் கொள்கைப் பற்றுடன் ஒரு பகுத்தறிவாளனாக மக்கள் பணி செய்து கொண்டு வருகிறேன்.
நான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருடனும் அன்புடன் பழகுபவன் என்பது, என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்.
இந்த நிலையில் நான் செய்யாத குற்றத்தைச் செய்ததாகப் பொய்யான பழியை என் மீது அரசியல் லாபத்திற்காகச் சிலர் சுமத்த முயன்றனர். என்மீதான அந்தக் குற்றச்சாட்டு உண்மையானதல்ல என்பது குறித்த விளக்கத்தை மாற்றுக்கட்சி நிர்வாகியிடம் எடுத்துரைக்கச் சென்றேன். அங்கு நான் கூறாத, கனவிலும் பேச நினைக்காத வார்த்தைகளைப் பேசியதாகக் கூறி, முற்றிலும் அவதூறான செய்தியைச் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர்.
என்னைப் பொறுத்தவரை, அனைத்து சமூகத்தினரையுமே சமமாகப் பாவித்து நேசிக்கும் திராவிட இயக்கப் பண்பாட்டில் ஊறியவன் என்பதால், எந்த நிலையிலும் என்மனதில் வெறுப்புணர்வுக்கு இடமே தந்ததில்லை.
நான் குறிப்பிட்ட சமூகத்தைத் தரக்குறைவாகப் பேசினேன் என்பது, ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டு என்பதை இதன் மூலம் என் அன்பார்ந்த உறவுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது மட்டுமின்றி, என் வாழ்நாளில் எப்போதுமே அதுபோன்ற சிந்தனைக்கோ, பேச்சுக்கோ இடமிருக்காது என்பதையும் உறுதிபடக் கூற விரும்புகிறேன்.
அன்பே எனது வழி. அரவணைப்பே எனது வாழ்க்கைமுறை. உங்களில் ஒருவனான நான் உங்களுக்காக என்றும் உழைப்பேன். உறுதுணையான உறவாகத் தொடர்வேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகாரும், வழக்கும்..
மதுரை கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ பி.மூர்த்தி. இவருக்கு எதிராக சமீபத்தில் இணையதளத்தில் செய்தி ஒன்று வெளியானது. இது தொடர்பான தகவல்களை பாஜக இளைஞரணி மதுரை கோட்ட பொறுப்பாளரான ஊமச்சிகுளம் ஸ்ரீதேவி நகர் சங்கர் பாண்டி(30) தனது பேஸ்புக், ட்விட்டரில் மறுபதிவு செய்தார்.
இது பற்றி தெரிந்து கொண்ட மூர்த்தி எம்எல்ஏ உள்ளிட்ட 5 பேர் ஜூன் 22-ம் தேதி சங்கர் பாண்டி வீட்டுக்குச் சென்றனர். தனக்கு எதிராக தகவல் பதிவிட்டது குறித்து மூர்த்தி எம்எல்ஏ கேட்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தனக்கும், மனை விக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக மூர்த்தி எம்எல்ஏ மீது மதுரை காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சங்கர் பாண்டி புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் மதுரை ஊமச்சிகுளம் காவல் நிலைய எஸ்.ஐ கருப்புச்சாமி , மூர்த்தி எம்எல்ஏ மற்றும் 5 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
இந்நிலையில், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மூர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.