தமிழகம்

திமுகவின் மற்றொரு எம்எல்ஏ கரோனா தொற்றால் பாதிப்பு: விரைந்து நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து

செய்திப்பிரிவு

செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்.டி. அரசு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலம்பெற்று மக்கள் பணியாற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில் அது முன்களப்பணியாளர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் அதிகம் தாக்குகிறது. தமிழகத்தில் மக்கள் சேவையில் முன்னணியில் இருந்த சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர், திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசுக்கு லேசான அறிகுறி இருந்துள்ளது. இதனையடுத்து அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் விரைந்து நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கழகத்தின் செய்யூர் MLA @dr_rtarasu_ விரைந்து நலம் பெற விழைகிறேன்.

மக்கள் பணியில் அவருக்குள்ள அக்கறையும், தன்னம்பிக்கையும், தொடர்ந்து மேற்கொண்டு வரும் சிகிச்சையும் அவரை மீண்டும் வழக்கம்போல பணியாற்றச் செய்திடும்”.

இதேபோன்று ராஜ் தொலைக்காட்சியின் கேமராமேன் வேல்முருகன் மறைவுக்கும் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஊடகத்துறையினர் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது தொடர்பான ஸ்டாலின் பதிவு:

மூத்த ஒளிப்பதிவாளர் @RajtvNetwork வேல்முருகன் #Covid19-ல் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்! முன்கள வீரர்களாகப் பணியாற்றும் ஊடகத் துறையினர் தங்களின் பாதுகாப்பிலும் கவனம் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT