கோயிலில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார். 
தமிழகம்

நள்ளிரவில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் போராட்டம்: 25 தீட்சிதர்களுடன் நடைபெற்ற திருவிழா பூஜைகள்

க.ரமேஷ்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கோயில் திருவிழா பூஜைகளில் கலந்து கொள்ள 25 தீட்சிதர்கள் மற்றும் மேளதாளம் வாசிப்பவர்கள் 5 பேர் உள்ளிட்ட 30 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடந்து தேர்த் திருவிழா பூஜைகள் நடைபெற்றன.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவின் முக்கியத் திருவிழாக்களான தேர்த் திருவிழா மற்றும் தரிசன விழாவில் கலந்துகொண்டு பூஜைகள் செய்ய 150 தீட்சிதர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி பூஜையில் கலந்துகொள்ளும் 150 தீட்சிதர்களுக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 தீட்சிதர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2 தீட்சிதர்களும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் வசித்த கீழவீதி பகுதி முழுவதும் நகராட்சி ஊழியர்களால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தீட்சிதர்களுக்கு கரோனா பரிசோதனை

இதனைத் தொடந்து நேற்று (ஜூன் 26) பரிசோதனை முடிவு வந்த 148 தீட்சிதர்களும் இன்று (ஜூன் 27) நடைபெறும் தேர்த் திருவிழா பூஜைகளில் கலந்து கொள்வதாக முடிவு செய்தனர். இதனை அறிந்த சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், டிஎஸ்பி கார்த்திகேயன் ஆகியோர், மாவட்ட நிர்வாகம் 5 தீட்சிதர்களைதான் பூஜைக்கு அனுமதித்துள்ளது என்றும் 5 தீட்சிதர்கள்தான் கோயிலுக்குள் சென்று திருவிழா பூஜைகள் செய்ய முடியும் என்றும் கூறினர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட போலீஸார் கோயிலின் பிரதான வாயில் பகுதியான கீழசன்னதியில் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று (ஜூன் 26) நள்ளிரவு 2 மணியளவில் கீழசன்னதியில் குவிந்த தீட்சிதர்கள், 148 தீட்சிதர்களையும் கோயில் திருவிழாக்களில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்துத் தகவலறிந்த சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், கடலூர் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று குவிந்திருந்த தீட்சிதர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 25 தீட்சிதர்கள் கோயில் திருவிழா பூஜையில் அனுமதிப்பதாக சார் ஆட்சியர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தீட்சிதர்கள் கலைந்து சென்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில்

தேர்த் திருவிழா நாளான இன்று (ஜூன் 27) அதிகாலை 25 தீட்சிதர்கள் மற்றும் மேளதாளம் வாசிப்பவர்கள் 5 பேர் உள்ளிட்ட 30 பேர் கோயிலுக்குச் சென்று ஸ்ரீநடரஜர், சிவகாமி அம்மாள் சுவமிகளை சித் சபையில் இருந்து தேவ சபைக்கு எடுத்து வந்து சிறப்புப் பூஜை செய்தனர். கோயில் வளாகத்தில் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை (ஜூன் 28) முக்கியத் திருவிழாவான தரிசன விழா நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT