சென்னை ஓட்டேரியில் ஆதரவற்ற நிலையில் சாலையோரம் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு இறுதிச் சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்த பெண் காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை ஓட்டேரியில் உள்ளஎஸ்விஎம் நகரில் வயதான 3 சகோதரிகள் ஆதரவற்ற நிலையில்சாலையோரம் வசித்து வந்தனர். இவர்களுக்கு அப்பகுதி மக்கள் உணவு வழங்கி வந்தனர்.
இந்நிலையில், கால் வலியால் அவதிப்பட்டு வந்த இளைய சகோதரி பிரபாவதி (57) நேற்று காலைஉயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய அங்குள்ள பொதுமக்களிடம் மற்ற சகோதரிகள் உதவி கேட்டுள்ளனர். ஆனால் கரோனா அச்சம் காரணமாக யாரும்உதவி செய்ய முன்வரவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி, சக காவலர்களுடன் சம்பவ இடம் விரைந்துள்ளார். பிரபாவதியின் உடலை நல்லடக்கம் செய்வது தொடர்பாக மாநகராட்சி அதிகாரியிடம் பேசினார். பின்னர் ராஜேஸ்வரி மற்றும் சக காவலர்கள் இணைந்து பிரபாவதி உடலுக்கு இறுதி சடங்கு, சம்பிரதாயங்களைச் செய்து ஓட்டேரி மயானத்தில் நல்லடக்கம் செய்துள்ளனர்.
பெண் ஆய்வாளர் மற்றும் காவலர்களின் இந்த மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.