தமிழகம்

சென்னையில் மியான்மர் அகதிகள் அலைக்கழிக்கப்பட்ட விவகாரம்: தலைமைச் செயலருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

மியான்மர் நாட்டு அகதிகள் சென்னையில் மோசமாக நடத்தப்பட்ட சம்பவத்தில் 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக தலைமைச் செயலர் மற்றும் சென்னை மாநகர போலீஸ் ஆணையருக்கு மத்திய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மணலி, திருவள்ளுவர் தெருவில் பெண்கள், குழந்தைகள் என 57 பேர், தங்கள் பொருட்களுடன் அகதிகளாக வந்து தங்கியுள்ளனர். அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் ஆர்டிஓ ஆகியோர் அகதிகளிடம் நேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 2012-ம் ஆண்டே மியான்மரில் இருந்து அகதிகளாக சென்னை வந்த அவர்கள், கேளம்பாக்கத்தில் தங்கியுள்ள னர். அதன்பின், அவர்கள் தங்கியிருந்த இடத்தின் உரிமையாளர் காலி செய்ய கூறியதால் அங்கிருந்து மணலிக்கு இடம் பெயர்ந்தனராம். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் உள்ளூர் போலீஸார் அகதிகளை அங்கிருந்து காலி செய்ய கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் மணலியில் இருந்து மண்ணடிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த தகவல் கடந்த 4-ம் தேதி பத்திரிகை களில் வெளியானது. பத்திரிகை செய்தி கள் அடிப்படையில், தானே முன்வந்து தேசிய மனித உரிமை ஆணையம் வழக்காக எடுத்துள்ளது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி டி.முருகேசன், அகதிகளை பாதுகாக்க வேண்டியது மாநில அரசு அதிகாரிகளின் கடமை என சுட்டிக்காட்டியுள்ளதுடன், சம் பவம் குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக தலைமைச் செயலர் மற்றும் சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT