கோவில்பட்டி சிறையில் மர்மமான முறையில் இறந்த சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சத்துக்கான காசோலையை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று நேரில் வழங்கினார்.
உயிரிழந்த வியாபாரி ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் மகள்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக முதல்வர் அறிவித்த ரூ.20 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசு அறிவித்தப்படி குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு விரைவில் அரசு வேலை வழங்கப்படும். தமிழகத்தில் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெற கூடாது என்பதில் அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது என்பதில் எவ்வித மாறுப்பட்ட கருத்தும் கிடையாது.
ஒரு சில சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்தமாக தமிழக காவல் துறையை குறைகூறக் கூடாது. இந்தியவிலேயே சென்னை மற்றும் கோவை காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக விருது பெற்றுள்ளன.
இதுபோன்ற ஏதாவது சம்பவங்கள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதில் அரசு பாரபட்சம் காட்டுவதில்லை. அதன் அடிப்படையிலேயே 24 மணி நேரத்தில் துறைரீதியிலான நடவடிக்கை எடுத்து 4 போலீஸார் மீது முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார் அவர்.