சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்தன. காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திமுக சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தந்தை - மகன் மர்ம மரணம் தொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார், மாநில மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த வணிகர்கள் இருவரின் மரணத்திற்கு நீதி கேட்டு இன்று தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்துள்ளனர்.
இந்தக் கடையடைப்பில் மருத்துவச் சேவையின் முக்கிய அம்சமான மருந்துக்கடைகளும் அடங்கும். மருந்துக்கடைகள் சார்பில் 4 மணி நேரம் கடையடைப்பை நடத்துகின்றனர்.