ஜி.கே.வாசன்: கோப்புப்படம் 
தமிழகம்

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வரும் கூட்டுறவு வங்கிகள்; சில வங்கிகள் திவாலாகும் நிலை தடுத்து நிறுத்தப்படும்; வாசன்

செய்திப்பிரிவு

சிறு, குறு தொழில்களுக்கும் விவசாயத்திற்கும் கடன்பெறும் முறை எளிதாக்கப்பட வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 26) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய அரசு, மாநில நகர கூட்டறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்று முடிவெடுத்து இருப்பதாக அறிவித்திருக்கிறது. இதில் 58 மாநில கூட்டுறவு வங்கிகளும் 1,482 நகரக் கூட்டுறவு வங்கிகளும் ஆக 1,540 வங்கிகள் ஆர்பிஐ-யின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதற்கு மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

இந்த புதிய முடிவால் கூட்டுறவு வங்கிகளில் உள்ள வைப்பு தொகைக்கு ரிசர்வ் வங்கி பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் அளிக்கும். இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு வங்கியின் மீது நம்பிக்கை ஏற்படும். அதனால், வைப்புத் தொகையும் உயரும். இதுவரை கண்காணிப்பு குறைவால் சில வங்கிகள் திவாலாகும் நிலை தடுத்து நிறுத்தப்படும்.

மத்திய அரசின் முடிவால் கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் சட்டமசோதா நிறைவேற்றப்படும் போது சில நடைமுறைகளை வரையறுத்து நிறைவேற்ற வேண்டும். அதாவது சிறு, குறு தொழில்களுக்கும் விவசாயிகளுக்கும் கிராமப்புற மக்களுக்கும் கடன்பெறும் முறை எளிதாக்கப்பட வேண்டும். இயற்கை சீற்றங்களால் ஏற்படும் புயல், வெள்ளம், வறட்சி ஆகிய காலங்களில் விவசாயிகள் நலன் கருதி அவர்கள் வாங்கிய கடன்களை அந்தந்த மாநில அரசுகள் மக்கள் நலன் கருதி தள்ளுபடி செய்ய முடிவு செய்தால் அவற்றுக்கு ரிசர்வ் வங்கி மாநில அரசுக்கு முடிவெடுக்கும் உரிமையை சட்டத்தில் இடம் பெற செய்ய வேண்டும்.

தமிழக அரசு கூட்டுறவு சங்கங்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுவது தொடர்பாக தனது கருத்துக்களை மத்திய அரசுக்கு தெரிவித்திருப்பதாக அறியப்படுகிறது. சட்டம் இயற்றும் போது அக்கருத்துக்களையும் கவனத்தில் எடுத்து பரிசீலிக்க வேண்டும். வங்கிகளின் முறையான செயல்பாட்டுக்கு இது வழிவகுக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT