திருச்சி செல்வதற்காக நேற்று பேருந்தில் வந்து புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் இறக்கி விடப்பட்ட பயணிகள், திருச்சி செல்லும் பேருந்துக்காக மாத்தூர் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து செல்கின்றனர்.படம்: ஜி.ஞானவேல்முருகன் 
தமிழகம்

மண்டலத்துக்குள் பொதுப் போக்குவரத்து நிறுத்தம்; மாவட்ட எல்லைகள் வரை இயக்கப்பட்ட பேருந்துகள்- அடுத்த மாவட்டம் செல்வோருக்கு பரிசோதனை இல்லை

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயக்கப்படும் என தமிழக முதல்வர் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து மாவட்ட எல்லைகள் வரை நேற்று பேருந்துகள் இயக்கப்பட்டன.

மண்டலங்களுக்குள் இயக்கப் பட்டு வந்த பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் நேற்று முதல் தடை செய்யப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டுமே இயக்கப்பட்டன. இருசக்கர வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் வெளி மாவட்டங்களுக்குச் செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டதால், மாவட்ட எல்லைகள் வரை பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழித்தடத்தில் தேவராயநேரி வரையிலும், சேலம் வழித்தடத்தில் மேய்க்கல்நாயக்கன்பட்டி வரையிலும், புதுக்கோட்டை வழித்தடத்தில் மாத்தூர் வரையிலும், கரூர் வழித்தடத்தில் பேட்டைவாய்த்தலை வரையிலும், மதுரை வழித்தடத்தில் துவரங்குறிச்சி வரையிலும், திண்டுக்கல் வழித்தடத்தில் பொன்னம்பலப்பட்டி வரையிலும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதன் காரணமாக அடுத்த மாவட்டங்களுக்கு பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மாவட்ட எல்லை வரை சென்று, பின்னர் அந்த மாவட்டத்தில் இயக்கப்பட்ட பேருந்துகளில் ஏறிச் சென்றனர். பேருந்துகளில் ஒரு மாவட்டத்தில் இருந்து அடுத்த மாவட்டத்துக்கு செல்லும் மக்கள் எவ்வித பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை.

1,077 பேருந்துகள் இயக்கம்

அரசுப் போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் ஆர்.பொன்முடி கூறியதாவது: கும்பகோணம் கோட்டத்தில் காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய 6 மண்டலங்கள் உள்ளன. இதில் 12 மாவட்டங்கள் அடங்கியுள்ளன.

ஊரடங்கில் தளர்வு அறிவிக் கப்பட்டபோது 1,600 புறநகர மற்றும் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது தமிழக அரசுப் பேருந்துகள் மாவட்ட எல்லை வரை மட்டுமே இயக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மாவட்ட எல்லைகளுக் குள் மட்டுமே 1,077 பேருந்துகள் 6 மண்டலங்களிலும் இயக்கப்படு கின்றன. முன்பை விட அதிக நடைகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து கூடுதல் நடைகள் இயக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT