மணல் திருட்டு வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, கரோனா தடுப்புப் பணியில் தினமும் உயிரை பணயம் வைத்து போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு செலவிட ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது.
குமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ஜோஸ். இவரை ஆற்று மணல் திருட்டு வழக்கில் கருங்கல் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ஜஸ்டின் ஜோஸ் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரித்து நீதிபதி டீக்காராமன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பெயரில் ரூ.25 ஆயிரத்து வரைவோலையை ஜூலை 7-க்குள் வழங்க வேண்டும். இப்பணத்தை கரோனா தடுப்புப் பணியில் ஒவ்வொரு நாளும் உயிரைப் பணயம் வைத்து பணிபுரியும் சுகாதாரப்பணியாளர்களின் நலனுக்காக டீன் செலவிட வேண்டும்.
மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் தினமும் காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். போலீஸ் விசாரணை அல்லது நீதிமன்ற விசாரணையின் போது மனுதாரர் சாட்சிகளை கலைக்க முற்படக்கூடாது.
தப்பிச் செல்லக்கூடாது. இந்த நிபந்தனைகளை மீறினால் சட்டப்படி மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவருக்கு உரிமை வழங்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.