சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 40 பேர் குணமடைந்தனர். மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க காலத்தில் 12 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். தொடர்ந்து வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர். இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று சிவகங்கை, வாணியங்குடி, டி.ஆலங்குளம், தேவகோட்டை, தென்னீர்வயல் பெரியகரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் இன்று மட்டும் ஒரே நாளில் 40 பேர் குணமடைந்தனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார். மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர்கள் மீனா, முகமது ரபீக் ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்பு எஸ்.ஐ.க்கு கரோனா:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலைய சிறப்பு எஸ்ஐக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது. திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு எஸ்.ஐ. ஒவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.
அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருப்புவனம் காவல் நிலையம் மூடப்பட்டது. மேலும் காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைத்து போலீஸாருக்கும் கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பபட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் கரோனா பாதிப்பு உள்ள சிறப்பு எஸ்ஐயின் குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பபட்டது.
திருப்புவனம் பகுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளர்.