இந்தியாவிலேயே நோயை மையமாக வைத்து அரசியல் செய்வது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கோவையில் இன்று (ஜூன் 25) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கோவையில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். கோவை மாவட்ட நிர்வாகம் மிகச் சிறப்பான முறையில் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது பாராட்டுக்குரியது.
அதேபோல, சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள், விவசாய சங்கங்கள், மகளிர் சுயஉதவிக் குழு பிரதிநிதிகளிடமும் பேசினேன். அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்.
கோவை மாவட்டத்தில் 36 ஆயிரத்து 905 பேரைப் பரிசோதித்ததில், 292 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 112 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் மூலம்தான் அதிக அளவில் நோய் பரவியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை.
தென்னையிலிருந்து நீராபானம் இறக்க அனுமதி வழங்கியுள்ளோம். கொப்பரை விலையை உயர்த்துமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தி, விலையை உயர்த்தியுள்ளோம். தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தால் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பயனடைவர். 2021 டிசம்பர் மாதத்துக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும். திட்டத்தில் விடுபட்ட பகுதிகள், இரண்டாவது கட்டத்தில் சேர்க்கப்படும். ஆனைமலை நல்லாறு திட்டம், பாண்டியாறு புன்னம்புழா திட்டம் தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காணப்படும்.
மத்திய அரசிடமிருந்து சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் நிதியுதவி பெற்றுத் தந்துள்ளோம். தமிழகத்தில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 98 தொழில்முனைவோர் பயனடையும் வகையில், ரூ.4,145 கோடி நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தந்துள்ளோம். தேசிய அளவில் 10 சதவீத நிதி தமிழகத்துக்குத்தான் கிடைத்துள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் 9,991 தொழில்முனைவோருக்கு ரூ.761.50 கோடி வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல, தமிழகத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வருக்கு சேலம் மாவட்டம் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார். இப்போது, கோவை, திருச்சி மாவட்டங்களுக்குப் பயணிப்பதாக தகவல் வெளியானவுடன், எதற்காக முதல்வர் கோவை, திருச்சிக்குச் செல்ல வேண்டுமென கேள்வி எழுப்புகிறார். இனி நான் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வேன்.
கடந்த 90 நாட்களாக கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க இரவு-பகல் பாராது கண்விழித்துப் பணியாற்றியுள்ளோம். ஆனால், அரசு எதுவுமே செய்யவில்லை என்று பொய்யான தகவலை தினந்தோறும் கூறுகிறார் ஸ்டாலின். நாட்டிலேயே நோயை வைத்து அரசியல் நடத்துவது திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும்தான். ஆக்கபூர்வமான கருத்துகள், வழிமுறைகள், ஆலோசனைகளைத் தெரிவிக்காமல், தனது இருப்பை வெளிப்படுத்த அவதூறு பரப்பும் அறிக்கைகளை மட்டும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருமே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாமல், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் புறக்கணித்துவிட்டு, விளம்பரம் தேடுவதற்காக ஓரிரு இடங்களில் திமுகவினர் நிவாரணப் பொருட்களை வழங்கினர். பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காததால் 500-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று பரவியது. ஒரு சட்டப்பேரவை உறுப்பினரையே இழக்க நேரிட்டது.
தமிழகத்தில்தான் அதிக அளவில் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். இதனால், நோய்த் தொற்று பரவலும், உயிரிழப்பும் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கத் தேவையான ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. ஆனால், நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்புவதையே ஸ்டாலின் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டுமெனவும், பொதுமக்களிடமிரும் கனிவுடனும், அன்பாகவும் நடந்துகொள்ளுமாறு காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளேன்".
இவ்வாறு முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.