கோப்புப் படம் 
தமிழகம்

சத்யன் மகாலிங்கத்தின் உதவி: மேடை மெல்லிசைக் கலைஞர்கள் சங்கம் நன்றி

செய்திப்பிரிவு

தொடர்ச்சியாக ஃபேஸ்புக் மூலமாக நிதி திரட்டி வரும் சத்யன் மகாலிங்கத்துக்கு மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கரோனா அச்சுறுத்தலால் பலரும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். இதில் மேடை இசைக் கலைஞர்களும் அடங்குவர். அவர்களுக்கு உதவும் பொருட்டு ஃபேஸ்புக் மூலம் 'சத்யன் உட்சவ்' என்ற நிகழ்வு நடைபெற்றது.

இது தொடர்பாக மேடை மெல்லிசைக் கலைஞர்கள் சங்கம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த இக்கட்டான கரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நலனுக்காக பின்னணிப் பாடகர் சத்யன் மகாலிங்கம், கடந்த 05/04/2020 முதல், 31/05/2020 வரை தினமும் முகநூல் வாயிலாக “சத்யன் உட்சவ்” என்கின்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தி, பாடி, முதல் கட்டமாக 30/05/2020 அன்று இரவு 7 மணி முதல் 31/05/2020 அன்று இரவு 8 மணி வரை தொடர்ந்து 24 மணி நேரம் பாடி, மொத்தம் 56 நாட்கள் பாடி, 14 லட்சம் ரூபாய் நிதி திரட்டி, சென்னையில் உள்ள மேடை மெல்லிசைக் கலைஞர்களுக்கு அளித்து உதவி இருக்கின்றார்.

பல திரை இசை பிரபலங்கள் இருந்தாலும் இந்த ஊரடங்குக் காலகட்டத்தில் யாரும் நிகழ்த்தாத சாதனையைச் செய்து பல குடும்பங்களுக்கு உதவியுள்ளார். இவர் அளித்துள்ள பணத்தைக் கொண்டு சென்னையில் உள்ள மிகவும் நலிந்த மேடை மெல்லிசைக் கலைஞர்களைத் தேர்வு செய்து, ஒவ்வொரு இசைக் கலைஞருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் தலா 1000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

மேடை மெல்லிசைக் கலைஞர்களுக்கு என அரசின் எந்த உதவியும் இல்லாத இந்தக் கால கட்டத்தில் இவர் மூலமாக வந்த இந்த உதவி காலத்தால் அழிக்க முடியாத ஒரு வரலாறு. இசைத் துறையில் எத்தனையோ சாதனையாளர்கள் இருந்தபோதும், தனி ஒரு இசைக் கலைஞராக இருந்து இவர் செய்த இந்தச் சாதனையை யாரும் இதுவரை செய்யவில்லை .

இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த சிங்கப்பூர் அப்போலோ செல்லப்பாஸ், பனானா லீப் அப்போலோ உரிமையாளர் சங்கர் நாதன் மற்றும் சென்னை அண்ணாநகர் விமலம் மெஸ் மற்றும் ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஸ்ரீ பாலாஜி & அபி இன்டர்நேஷனல் உரிமையாளர் தியாக குறிஞ்சி செல்வனுக்கும் நன்றி. மேலும், சத்யன் அவரின் இசை நிகழ்ச்சிக்கு ஆதரவு தந்து ஒத்துழைப்பு தந்த முகநூல் நண்பர்களுக்கும் நன்றி.

அடுத்த கட்டமாக 22/06/2020 அன்று மீண்டும் பாடத் தொடங்கிய சத்யன் மகாலிங்கம், தன்னால் இசைக் கலைஞர்கள் பயன் அடைய வேண்டும் என்று உறுதியோடு தன்னுடைய முகநூல் நண்பர்கள் துணையோடு, பாடி வருகிறார்".

இவ்வாறு மேடை மெல்லிசைக் கலைஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT