திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு நாள்தோறும் வேலைக்குச் செல்லும் கோவை, ஈரோடு மாவட்டத் தொழிலாளர்கள் இ-பாஸ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரை நம்பி, திருப்பூரில் வாழ்பவர்கள் மட்டுமின்றி கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்கள் திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிய நாள்தோறும் ரயில், பேருந்துகளில் வந்து செல்வது வாடிக்கை.
ஊரடங்குத் தளர்வில் மண்டலத்துக்குள் இயக்கப்பட்ட பேருந்துகளால் கடந்த இரு வார காலமாக வெளியூர்களில் இருந்து பலரும் நாள்தோறும் திருப்பூருக்கு பேருந்தில் வந்து சென்றனர். இந்நிலையில், தற்போது மாவட்ட எல்லையைக் கடக்க இ-பாஸ் தேவைப்படுவதால், பலரும் வேலைக்குச் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை உரிமையாளர் கண்ணன் என்பவர் கூறும்போது, "திருப்பூரில் வாழும் வடமாநிலத்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் ரயிலில் தங்களது சொந்த மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனர். இந்நிலையில், இங்கு இருப்பவர்களைக் கொண்டு, தற்போது பணிகளைச் செய்து வருகிறோம்.
தற்போது பேருந்துகள் மாவட்டத்துக்குள் மட்டும் இயக்கப்படுவதால், ஈரோடு மற்றும் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்து செல்பவர்கள் நாள்தோறும் இ-பாஸ் பெற விண்ணப்பித்து வேலைக்கு வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்று. ஆகவே இதில் தளர்வு அளித்தால் மட்டுமே நிறுவனத்தின் பணிகளை தொய்வின்றித் தொடர முடியும்" என்றார்.
பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கூறும்போது, "மாவட்ட எல்லைகளில் எங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால், எங்களால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அறிவிப்பு வரும் வரை, வேலையின்றி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 41 சோதனைச்சாவடிகள் அமைத்து வெளிப்பகுதிகளில் இருந்து வருகிறவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் மூலம் இ-பாஸ் பெறும் வசதியை எளிதாக்க வேண்டும்" என்றனர்.