டீன் சங்குமணி (நடுவில்) - கோப்புப்படம் 
தமிழகம்

மதுரை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் கரோனாவுக்கு 12 பேர் பலியா?- டீன் சங்குமணி விளக்கம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் நோயாளிகள் உயிரிழப்பது மறைக்கப்படுவதாகவும், இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டுமே ‘கரோனா’ பரவல் வேகமும், உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. தற்போது கடந்த 3 வாரமாக மதுரை மாவட்டத்தில் தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 1,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘கரோனா’வுக்கு தமிழகத்தில் முதல் உயிரிழிப்பு மதுரையில்தான் ஏற்பட்டது. அதன்பின் நேற்று வரை 9 பேர் வரை மட்டுமே ‘கரோனா’வுக்கு உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது.

ஆனால், ‘கரோனா’ வார்டில் தினமும் 5 பேர் முதல் 10 பேர் வரை உயிரிழப்பதாகவும், அவை மறைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வேகமாக ஒரு தகவல் பரவியது.

இதுகுறித்து ‘டீன்’ சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘மதுரையில், நேற்று முன்தினம் 2 பேரும், நேற்று 2 பேரும் மட்டும் ‘கரோனா’வுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று சிலர் உயிரிழந்த நிலையில் அவர்களின் ‘கரோனா’ பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. வந்தபிறகு சொல்வோம்.

மதுரை போன்ற பெரிய அரசு மருத்துவமனையில் தினமும் வெவ்வெறு நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சைக்கு கடைசி நேரத்தில் வருவோர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பது வழக்கமானது. அவர்களையும் ‘கரோனா’வால் இறந்ததாக கூறுவது தவறு. ‘கரோனா’ பாதிப்பும், அதன் உயிரிழப்பும் மறைக்காமல் வெளிப்படையாக சொல்லப்படுகிறது, ’’ என்றார்.

SCROLL FOR NEXT