கனிமொழி இல்லத்திற்கு முன்பு பாதுகாப்புக்காக மீண்டும் நிறுத்தப்பட்டுள்ள போலீஸார். 
தமிழகம்

கனிமொழி வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை சிஐடி காலனியில் உள்ள மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி வீட்டுக்கு வழங்கப்பட்ட காவலர்கள் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்ட நிலையில், மீண்டும் கனிமொழியின் இல்லத்திற்கு காவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு சென்னை, கோபாலபுரம் மற்றும் சிஐடி காலனியில் இல்லங்கள் உள்ளன. சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில் மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி வசித்து வருகிறார். கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை அங்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அவரின் மறைவுக்குப் பின்னர் 'இசட் பிளஸ்' பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டு, முன்னாள் முதல்வரின் இல்லம் என்ற காரணத்திற்காக காவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, அந்த இல்லத்தில் 5 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், அவரது இல்லத்திற்கு வழங்கப்பட்டு வந்த காவலர்கள் பாதுகாப்பு இன்று (ஜூன் 25) காலையில் திரும்பப் பெறப்பட்டதாகத் தகவல் வெளியானது.

கனிமொழி: கோப்புப்படம்

இதையடுத்து, காவலர்கள் பாதுகாப்பு திரும்பப் பெறப்படுவது குறித்து ஏன் தங்களுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கவில்லை எனவும், அவ்வாறு தெரிவித்திருந்தால் தனியார் நிறுவனப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருப்போம் எனவும், கனிமொழி தரப்பில் கூறப்பட்டது.

ஏ.கே.விஸ்வநாதன்: கோப்புப் படம்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 24-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை 5 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கரோனா தடுப்புப் பணிக்கு கூடுதல் காவலர்கள் தேவை என்பதாலும், கனிமொழியின் உயிருக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதாலும் காவலர்கள் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனாலும், இது பேசுபொருளானது. இந்நிலையில், கனிமொழியின் இல்லத்திற்கு மீண்டும் காவலர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 5 காவலர்கள் மீண்டும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT