தென்காசி மாவட்டத்தில் கரோனா பரிசோதனைக்காக சேகரிக்கப்படும் ரத்தம், சளி மாதிரிகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
திருநெல்வேலி ஆய்வகத்தில் பணிபுரியும் மருத்துவர், ஊழியருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அங்கு கடந்த சில நாட்களாக கரோனா பரிசோதனைகள் நடைபெறவில்லை.
இதனால், தென்காசி மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட ரத்தம், சளி மாதிரிகள் தூத்துக்குடி, நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இதில் பரிசோதனை முடிவுகள் கிடைக்க தாமதம் ஆனது. மேலும், கடந்த சில நாட்களாக பரிசோதனைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களில் மட்டும் வெளி நாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில், 900-க்கும் மேற்பட்டோர் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரோனா பரிசோதனை முடிவு தாமதம் ஆனதால், 4 நாட்களுக்கும் மேலாக பலர் முகாமில் தங்கும் நிலை ஏற்பட்டது. கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கும பணி நடைபெற்று வருகிறது. ஆய்வக கருவிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.
ரூ.65 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பணிகள் முடிந்து ஒரு வாரத்துக்குள் தென்காசியில் ஆய்வகம் செயல்பாட்டுக்கு வரும் என்றும், அதன் பிறகு பரிசோதனைகள் அதிகரிக்கப்படுவதோடு, முடிவுகளும் விரைவில் கிடைக்கும் என்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கூறினர்.