கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்த சாத்தான்குலத்தைச் சேர்ந்த கைதிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் அருகே தெற்குப் பேய்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (38). இவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராக இருந்து வந்தார். தெற்கு பேய்குளத்தில் இருந்த ஜெயக்குமாரை கடந்த மே 18-ம் தேதி ஒரு கும்பல் கொலை செய்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சாத்தான்குளம் போலீஸார் மே 20-ம் தேதி மேல பனைகுளத்தைச் சேர்ந்த சூசை மகன் ராஜாசிங் (36) உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.
இதில், ராஜாசிங் பேராவூரணி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். கடந்த 17-ம் தேதி ஜெயக்குமார் கொலை வழக்கு விசாரணைக்காக சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக சிறை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் காவலர்கள் ராஜாசிங்கை கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஏற்கெனவே கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் தற்போது சாத்தான்குளத்தில் சேர்ந்த மேலும் ஒரு கைதி கோவில்பட்டி கிளை சிறையில் இருந்து உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இன்று காலை கோவில்பட்டி கிளை சிறைக்கு வந்து ஆய்வு நடத்தினார். மேலும், கிளை சிறையில் உள்ள சிறைவாசிகள் மற்றும் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டார்.