தமிழகம்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு பேரவையில் பாராட்டு

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவையில் தேவையான நேரத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திமுக சட்டப்பேரவை குழு துணைத் தலைவர் துரைமுருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து பல்வேறு கட்சியின் உறுப்பினர்கள் பேசியதாவது:

துரைமுருகன் (திமுக):

இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தகோரி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற முதல்வரின் தீர்மானத்தை திமுக வரவேற்கிறது. ஐ.நா. மனித உரிமை குழுவில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. எனவே தேவையான நேரத்தில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. அமெரிக்கா தனது நிலையை மாற்றிக் கொள்வது பற்றி கவலை இல்லை. தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட இந்திய அரசை நாம் வலியுறுத்த வேண்டும்.

அ.சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட்):

இலங்கைக்கு ஆதரவாக தனது நிலையை அமெரிக்கா மாற்றிக் கொண்டுள்ள இந்த நேரத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் பாராட்டுக்குரியது. இதனை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

எம்.ஆறுமுகம் (இந்திய கம்யூ னிஸ்ட்):

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வ தேச விசாரணை நடத்தக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வரவேற்கத்தக்கது. இந்த தீர்மானத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்):

இலங்கையில் இனப்படுகொலை யில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சர்வதேச விசாரணை கோரி சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன்.

ஏ.கணேஷ்குமார் (பாமக):

முதல்வர் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை பாமக வரவேற்கிறது. இதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி):

இலங்கைக்கு ஆதரவாக தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ள அமெரிக்காவை கண்டித்து வலுவான தீர்மானத்தை கொண்டு வந்துள்ள முதல்வருக்கு பாராட்டுக்கள். உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளக்கிடக் கையை இந்த தீர்மானம் வெளிப்படுத்துகிறது.

டாக்டர் கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்):

ஈழத் தமிழர் பிரச்சினையில் கடந்த 4 ஆண்டுகளில் பல தீர்மானங்களை இந்த அரசு கொண்டு வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக முக்கியமான நேரத்தில் வலுவான தீர்மானத்தை கொண்டு வந்துள்ள முதல்வரை பாராட்டுகிறேன்.

SCROLL FOR NEXT