சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி தவிக்கும் மக்களின் நிலையைப் புரிந்து கொண்டு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோல், டீசலில் ஏற்படும் இழப்பைச் சரி்க்கட்டும் வகையில், கடந்த 2002-ம் ஆண்டுக்குப்பின் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையின் விலை நிலவரத்துக்கு ஏற்பட 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றிக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது.
அந்த வகையில், இருவாரங்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்ட போது அதிகபட்சமாக ரூ.5 மேல் உயர்ந்ததில்லை. அதன்பின் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றிக்கொள்ளவும் அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், கடந்த 7-ம் தேதியிலிருந்து தொடர்ந்து 18-வது நாளாக நேற்று (ஜூன் 24) பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.
இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 25) தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவால் மக்கள் ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாள்தோறும் உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.
இதனால் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி தவிக்கும் மக்களின் நிலையைப் புரிந்து கொண்டு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அண்மையில் உயர்த்தப்பட்ட வாட் வரியைக் குறைப்பதன் மூலம் தமிழக அரசும் மக்களின் சுமையைக் குறைக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.