விழுப்புரம் நகரில் உள்ள வழக்கமான போக்குவரத்து (கோப்புப்படம்) 
தமிழகம்

அதிகரிக்கும் கரோனா பரவல்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த தேமுதிக கோரிக்கை

எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனா பரவலை தடுக்க உடனடியாக பொதுமுடக்கம் அல்லது தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த 2 ஆட்சியர்களும் முன்வர வேண்டும் என்று தேமுதிக மாவட்ட செயலாளரான முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (ஜூன் 25) வெளியிட்டுள்ள அறிக்கை:

"கடைகள் எல்லாம் மாலை 4 மணி வரை தான் திறந்திருக்கும் என்ற வியூகத்தால் கரோனா தொற்றின் வீரியம் ஒருபோதும் குறையப்போவதில்லை. தொற்று எப்படி வருகிறது என்றே தெரியாத நிலையில் உள்ள நாம் எப்படி கட்டுப்படுத்த அல்லது மட்டுப்படுத்த முடியும்?

அதே போன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உடலின் வெப்பத்தைக் கணக்கிட வெப்பமானி உள்ளதா? அனைத்து கடைகளின் வாயில் பகுதிகளிலும் சுத்தமாக கை கழுவ 'வாஷ்பேசின்'களும் அதற்கான சோப்புகளும் உள்ளதா? மேற்கண்ட இடங்களில் தனிமனித இடைவெளி சரியாக பின்பற்றப்படுகிறதா? சானிடைசர் வைக்கப்பட்டுள்ளதா?அப்படி சானிடைசர் இருந்தாலும் அது தரமானதா? வைரஸை அழிக்கும் தன்மையுடையதா? கைக்கான கிருமிநாசினியில் விதவிதமான 'பிளேவர்' வாசனை வருவது எப்படி? இதை அரசு ஆய்வு செய்ததுண்டா? திடீரென குடிசைத்தொழிலாகிவிட்ட இந்த தயாரிப்புகளின் தரத்தை அறிவது யார், எப்படி? அரசாங்கம் எவ்வளவு கத்தினாலும், கதறினாலும் முகக்கவசம் அணியவே அணியாத கிராமத்து மக்களை முகக்கவசம் அணிய வைப்பது எப்படி? ஒருமுறை போட்டுவிட்டு கழட்டி குப்பைத்தொட்டியில் போட வேண்டிய முகக்கவசத்தை ஒரு மாதம் முழுவதும் போடுகிற மக்களுக்கு இது தவறு என சொல்லப்போவது எப்போது? என ஆயிரமாயிரம் கேள்விகள் இருக்கின்றன.

சுமார் 40 லட்சத்திற்கும் மேலான மக்கள் உள்ள நம் மாவட்டங்களில் இதை நடைமுறைப்படுத்துவது சிரமம் என்பது எங்களுக்கும் புரிகின்றது. அதனால்தான் முழு ஊரடங்கை விழுப்புரம்-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமல்படுத்தினால் நோய் பரவலை தடுக்க முடியும் என மாவட்ட தேமுதிக கோருகிறது"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT