சென்னை மாநகராட்சியில் தெர்மல் ஸ்கேனர் கருவிகள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக ஆதாரத்துடன் நிரூபித்தால் அமைச்சர் பதவியை விட்டு விலகத்தயார் என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் தெர்மல் ஸ்கேனர் கருவியை அதிக விலைக்கு வாங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாநகராட்சி யில் வீடுதோறும் சென்று அறிகுறிகளைக் கண்டறிய 10 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என பொறுப்புகளை வகித்த ஸ்டாலின், தெர்மல் ஸ்கேனர் கருவிகளை அரசு என்ன விலை கொடுத்து வாங்கி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்காமல், அதிகபட்ச சில்லறை விலையை பார்த்துவிட்டு ரூ.9,175-க்கு வாங்கியிருப்பதாக சென்னை மாநகராட்சி மீது அவதூறாகப் பழி போட்டுள் ளார். உண்மையில் தெர்மல் ஸ்கேனர் ரூ.1,765 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் வாங்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியவில்லை என்றால், திமுக தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் பதவிகளைத் துறந்துவிட்டு அரசியலை விட்டே அவர் ஒதுங்கிப் போக வேண்டும். நிரூபித்தால், நான் அமைச்சர் பொறுப்பு உட்பட அனைத்து அரசியல் பதவிகளை துறந்து, அரசியலை விட்டே விலகத் தயார். இவ்வாறு அறிக்கையில் தெரிவித் துள்ளார்.