நரபலி கொடுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்ட இடத்தை மூன்றாவது நாளாக நேற்று தோண்டியபோது முழுமையான எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது. இது அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 7-வது எலும்புக் கூடாகும்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தெற்கு தெருவில் பிஆர்பி கிரானைட் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்த சேவற் கொடியோன், கிரானைட் நிறுவன வளர்ச்சிக்காக மனநலம் பாதிக் கப்பட்டவர்களை நரபலி கொடுத்து சடலங்கள் இ.மலம்பட்டியில் புதைக்கப்பட்டதாக புகார் தெரி வித்திருந்தார். இதையடுத்து, சட லங்கள் புதைக்கப்பட்ட இடத்தில் கடந்த 13-ம் தேதி 5 அடி ஆழம் தோண்டியபோது ஒரு குழந்தை உட்பட 4 சடலங்களின் எலும்புகள், மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
அந்த இடத்தை 12 அடி ஆழம் தோண்ட சட்ட ஆணையர்சகாயம் உத்தரவிட்டார். அதன்படி அந்த இடம் கடந்த 18-ம் தேதி மீண்டும் தோண்டப்பட்டது. முதல் நாளில் 2 ஆண் சடலங்களின் எலும்புகள் எடுக்கப்பட்டன. நேற்று முன்தினம் 8 எலும்புத் துண்டுகளும், தேங் காயும் எடுக்கப்பட்டன.
சகாயம் குழுவினர் அடையா ளம் காட்டிய இடத்தில் நேற்று முன்தினம் வரை ஒரு பக்கம் 10 அடி ஆழம் வரையும், மற் றொரு பக்கம் 4 அடி வரையும் தோண்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், 3-ம் நாளாக தோண்டும் பணி நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. சகாயம் குழுவினர், மேலூர் டி.எஸ்.பி. மங்களேஸ்வரன், வட்டாட்சியர் கிருஷ்ணன், மருத்துவக் குழுவினர் ஆகியோர் முன்னிலையில் தோண் டும் பணி நடைபெற்றது. இப் பணியில் 12 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். நான்கு அடி வரை தோண்டப்பட்டிருந்த பகுதியை தொழிலாளர்கள் மேலும் தோண் டினர்.
அப்போது துணிகள் இல்லாத நிலையில் ஒரு மண்டை ஓட்டுடன் கூடிய எலும்புக்கூடு கிடைத்தது. அந்த மண்டை ஓடு மற்றும் பற்களை குழுவினர் சேகரித்தனர். மாலை 5.30 மணிக்கு தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.
தோண்டும் பணி தொடரும்
மாலையில் கோட்டாட்சியர் செந்தில்குமாரி அங்கு வந்து பணியை பார்வையிட்டார். தொடர்ந்து இன்றும் தோண்டும் பணி நடைபெறும் எனத் தெரிகிறது.
இதனிடையே அப்பகுதியில் மயானம் என்பதால் பக்கவாட்டில் தோண்டினால் சடலங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். எனவே பக்கவாட்டில் தோண்டாமல் ஏற்கெனவே தோண்டிய இடத்தில் ஆழமாகத் தோண்ட வேண்டும் என்று இ.மலம்பட்டி ஊராட்சித் தலைவர் பாண்டி வருவாய் அதிகாரியிடம் வற்புறுத்தியுள் ளார்.