மதுரை மாநகர் பகுதியில் கரோனா பரவல் அதிகரிப்பால் மீண்டும் முழு ஊரடங்கு ஜூன் 30 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி மதுரை நகரமே நேற்று வெறிச்சோடியது. மாசி வீதிகள், திண்டுக்கல் ரோடு, டவுன்ஹால் ரோடு, நகைக்கடை பஜார் உட்பட முக்கிய பஜார்கள் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையம் பயணிகள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.
விருதுநகர், சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் பகுதியில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் திருமங்கலத்திலும், சிங்கம் புணரி, கொட்டாம்பட்டி, திருப்புத்தூர் பகுதிகளில் இருந்து மதுரை வரும் பேருந்துகள் மேலூர் வரையிலும், நத்தம் பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் கடவூர் வரையிலும், திண்டுக்கல் பகுதியில் இருந்து வந்த பேருந்துகள் வாடிப்பட்டி வரையிலும், தேனி பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் செக்கானூரணி வரையிலுமே அனுமதிக்கப்பட்டன. நகர் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மதுரையில் பத்திரிகையாளர்கள் இருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஆட்சியர் வளாகத்திலுள்ள செய்தியாளர் அறை மூடப்பட்டது. ஆட்சியர் உத்தரவின்பேரில் பத்திரிகை யாளர்களுக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.