தமிழகம்

கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் மரணம் எதிரொலி; போலீஸாருக்கு உரிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்: உயர் நீதிமன்றக் கிளை யோசனை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடைகள் நடத்தி வந்த னர். ஊரடங்கில் குறிப்பிட்ட நேரம் கடந்தும் கடையைத் திறந்திருந்ததாக இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். ஆனால், இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தை உயர் நீதிமன்றக் கிளை தாமாக முன்வந்து (‘suo moto’) எடுத்து நேற்று விசாரித்தது. நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் தமிழக டிஜிபி, தூத்துக்குடி எஸ்பி இருவரும் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டனர்.

மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டிஜிபி முதல்வரின் ஆலோசனையில் பங்கேற்றதால் அவருக்குப் பதிலாக தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், தூத்துக்குடி எஸ்பி அருண்பாலகோபாலன் ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகி னர். இதையடுத்து நீதிபதிகள் அளித்த உத்தரவு:

இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அதற்காக காவல்துறை அதிகாரிகளுக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க வேண்டும்.

தொடர்ந்து கோவில்பட்டி நீதித் துறை நடுவரின் விசாரணை அறிக்கை மற்றும் இருவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, அதன் ஒளிப்பதிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வழக்கின் நிலை தொடர்பாக தூத்துக்குடி எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை நீதிமன்றம் கண்காணித்துக் கொண்டிருப்பதையும், உரிய நீதி வழங்கப்படும் என்பதையும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT