தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் நகரங்களில் மதுரை உள்ளது.
கரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்து கடந்த 2 மாதங்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, மிகக் குறைந்தளவில் இருந்தது.
ஊரடங்கு தளர்வுக்குப் பின், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து மதுரைக்கு அதிகமானோர் வந்தநிலையில், கடந்த 10 நாட்களாகவே தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. 300க்கும் மேற்பட்டோர் அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இடப்பற்றாக்குறை நிலவுகிறது.
இந்நிலையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் உயர்ந்து கொண்டே செல்வதால் படுக்கை வசதியுடன் கூடிய கூடுதல் மருத்துவமனை தேவை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே மதுரை ரயில்வே பணி மனையில் ரயில் பெட்டிகளை தற்காலிக கரோனா வார்டாக மாற்றிய நிலையில், மேலும், மதுரை ரயில்வே மருத்துவமனையும் கரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆட்சியர் டிஜி. வினய், டீன் சங்குமணி உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முதல்மாடியை கரோனா மருத்துவமனை யாகவும், தரைதளத்தை ரயில்வே தொழிலாளர்களுக்கான பிற நோய் பாதிப்பு சிகிச்சைக்கான பகுதியாக மாற்றியதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக டிஆர்இயூ கோட்ட செயலர் சங்கரநாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியது: மதுரை ரயில்வே மருத்துவ மனையில் ஏற்கனவே கடந்த 8 மாதமாக தலைமை மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது. குழந்தை மருத்துவர் உள்ளிட்ட போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி பெற்ற தொழில் நுட்பநர்கள் இல்லை.
மதுரை கோட்டத்திற்கே இது தான் பெரிய மருத்துவமனை. இக்கோட்டத்தில் 8 ஆயிரம் தொழிலாளர்கள், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரிய நோய் பாதிப்புக்கென இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை வருகின்றனர்.
இருப்பினும், தற்போது முதல்மாடி கரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதில் தவறில்லை. தரைத்தளத்திலுள்ள ரயில்வே மருத்துவமனைக்கு வரும் வெளிநோயாளி, உள்நோயாளிகளும் பாதிக்கப்பட வாய்ப் புள்ளது.
எனவே, தொற்றில் இருந்து பாதுகாக்க, ரயில்வே மருத் துவமனையை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற கோட்ட நிர்வாகம் பரிசீலிக்கவேண்டும், என்றனர்.