உடுமலை சங்கர் கொலை வழக்கில் விடுதலையான கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமிக்கு பழநியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.
உடுமலையை சேர்ந்த சங்கர், பழநியை சேர்ந்த சின்னச்சாமி மகள் கவுசல்யாவை கலப்பு திருமணம் செய்ததற்காக, உடுமலை பேருந்துநிலையம் முன்பு கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முதல்குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமிக்கு திருப்பூர் நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சின்னச்சாமி மேல்முறையீடு செய்தார்.
விசாரணை முடிவில் சின்னச்சாமியின் மரணதண்டனையை ரத்துசெய்தும், அவரை விடுதலைசெய்தும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து சிறையில் இருந்து விடுதலையாகி, போலீஸ்பாதுகாப்புடன் நேற்று இரவு பழநி வந்தார் சின்னச்சாமி. இவரை போலீஸார் பழநியாண்டவர் ஆண்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பரிசோனை மையத்தில் அனுமதித்தனர்.
இங்கு அவருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வரும்வரை கல்லூரிவளாகத்தில் தங்கவைக்கப்பட்டு சின்னச்சாமியை தனிமைப்படுத்தியுள்ளனர்.
சிறையில் இருந்து வந்த சின்னச்சாமியை காண கரோனா தனிமைப்படுத்தும் மையம் முன்பு உறவினர்கள் காத்திருந்தனர். பரிசோதனை முடிவுகள் வந்தபிறகு சின்னச்சாமியை போலீஸார், மருத்துவத்துறையினர் அவரது வீட்டிற்கு அனுப்ப உள்ளனர்.