தமிழகம்

மதுரையில் 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கரோனா காய்ச்சல் பரிசோதனை சிறப்பு மருத்துவமனைகளாக மாற்றம் 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகராட்சியில் உள்ள 31 அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள், காய்ச்சல் பரிசோதனை செய்யும் சிறப்பு மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய மதுரை மாவட்ட கரோனா தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பு அதிகாரி டாக்டர் பி.சந்திரமோகன் தெரிவித்தார்.

மதுரை தமிழ்நாடு அரசு வேளாண்மை கல்லூரி வளாகத்தில் உள்ள கரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தும் மையம் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவனையை மதுரை மாவட்ட கரோனா தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பு அதிகாரி டாக்டர் பி.சந்திரமோகன் நேற்று ஆய்வு செய்தார்.

அதன்பின் மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர், மருத்துவ வல்லுநர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

இதுகுறித்து டாக்டர் பி.சந்திரமோகன் கூறியதாவது:

மதுரை அரசு மருத்துவமனையில் மொத்தம் 3,500 படுக்கைகள் இருக்கின்றன. மேலும், 500 படுக்கைகள் அதிகப்படுத்தியபின் 4000 படுக்கை வசதி இருக்கும். அதில் 2000 படுக்கைகளில் கரோனா நோயாளிகளை அனுமதிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

நோயாளிகள் உயர உயர இரண்டாம் நிலை பராமரிப்பு, துணை பராமரிப்பு என இரண்டு நிலைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் தீவிர சிகிச்சை பிரிவில் 150 படுக்கைகளும், 375 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 125 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இதை தவிர நோய் பதிப்பு குறைவாக உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க 2,000 படுக்கைகள் ஏற்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு வேளாண்மை கல்லூரி வளாகத்தில் 3 பிளாக்குகளில் 300 படுக்கைகள் உள்ளன. இந்த வசதிகள் இப்போது உள்ள நிலைக்கு போதுமானதாகும் என கருதுகிறோம். எந்த பகுதியில் அதிகமாக நோய் பரவுகிறது என கண்டறிந்து, அந்த பகுதியை கட்டுப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போது மதுரையை பொறுத்தவரை சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று யாருக்காவது அறிகுறிகள் இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டு, அறிகுறிகள் தெரியும் நபரை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் தொடர்ந்து 4 நாட்கள் கண்காணிக்கப்படுவார்கள். மதுரை மாநகராட்சியில் உள்ள 31 ஆரம்ப சுகாதார நிலையங்களை காய்ச்சல் பரிசோதனை செய்யும் சிறப்பு மருத்துவமனைகளாக மாற்றுப்பட்டுள்ளது.

அந்த சுகாதார நிலையங்கள் மூலம் பரிசோதனை செய்யப்படும் போது யாருக்காவது காய்ச்சல் இருந்தால், அந்த காய்ச்சல் சாதாரண காய்ச்சலாக இருந்தால் சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

கரோனா வைரஸ் காய்ச்சலாக இருந்தால் அதற்குரிய தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். கரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க முன்வரும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளித்து ஊக்கப்படுத்தப்படுகிறது. தற்போது 3 தனியார் மருத்துவமனைகளுக்கு கரோனா வைரஸ் நோய் பரிசோதனை செய்யவும், சிகிச்சை அளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரித்தார்.

SCROLL FOR NEXT