கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த வருவாய் ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவராண நிதி வழங்கக் கோரி, தமிழ்நாடு முழுவதும் 3 நாட்கள் கருப்பு வில்லை அணிந்து பணியில் ஈடுபடும் போராட்டத்தை வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் தொடங்கியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் சிறுகமணி மேற்கு கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த எஸ்.குமார், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் பணியை முடித்துவிட்டு, மே 13-ம் தேதி இரவு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி மற்றும் அவரது மகளுக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி நியமன ஆணை ஆகியவை வழங்கப்பட்டது.
அதேவேளையில், மே 20-ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்த தொட்டியம் வருவாய் ஆய்வாளர் பொ.சேகர் குடும்பத்துக்கு இதுவரை அரசின் ரூ.50 லட்சம் நிவாரண நிதி இதுவரை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அரசிடம் முறையீடு செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, வருவாய் ஆய்வாளர் பொ.சேகர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி திருச்சி உட்பட மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் இன்று (ஜூன் 24) கருப்பு வில்லை அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, "கரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு பணியாளர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவர்களது குடும்ப உறுப்பினர் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என்று 2020, ஏப்.22-ம் தேதி முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.
இதன்படி, மே 13-ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு நிவாரண நிதி, வாரிசுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில், வருவாய் ஆய்வாளர் சேகர் குடும்பத்துக்கு நிவாரண நிதி இதுவரை வழங்கப்படவில்லை.
இதையடுத்து, ஜூன் 8-ம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பெருந்திரள் முறையீடு செய்தோம். அதைத்தொடர்ந்து, ஜூன் 12-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் பெருந்திரள் முறையீடு செய்த நிலையில், திருச்சியில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை இல்லாததால், மாநில மையத்தின் அறிவுரையின்படி ஜூன் 24-ம் தேதி முதல் ஜூன் 26-ம் தேதி வரை கருப்பு வில்லை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறை அலுவலக உதவியாளர்கள் முதல் வட்டாட்சியர்கள் வரை அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதன்பிறகும் நிவாரண நிதி வழங்கப்படவில்லையெனில், சங்கத்தின் மாநில மையத்தின் அறிவுரையின்பேரில் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம்" என்றனர்.
போராட்டம் தொடருமா?
ஏற்கெனவே திட்டமிட்டபடி கருப்பு வில்லை அணிந்து பணியில் ஈடுபடும் போராட்டத்தை வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் இன்று (ஜூன் 24) தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 26-ம் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் கே.பழனிசாமி பங்கேற்கவுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அலுவலர்கள் கருப்பு வில்லை அணிந்து பங்கேற்றால் சரியாக இருக்குமா என்ற கேள்வியும், சர்ச்சையாகி விடாதா என்ற சந்தேகமும் அரசு அலுவலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதேவேளையில், முதல்வரின் திருச்சி வருகையின்போது போராட்டத்தை ஒத்திவைப்பது குறித்து இன்று பிற்பகல் வரை தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மாநில மையத்தில் இருந்து தகவல் இல்லை. எனவே, ஏற்கெனவே திட்டமிட்டபடி போராட்டத்தைத் தொடர வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.