மக்களை துயரக்கடலில் தள்ளிவிடாமல் ஆட்சி நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசியலில், தரமில்லாதவர்களின் கூடாரமாக அதிமுக மாறிவிட்டதை நிரூபிக்கும் வகையில் அபத்தக் களஞ்சியமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் மீதும், கட்சி முன்னணியினர் மீதும் சேறுவாரி இறைக்கும் வேலையில் இறங்கியிருக்கின்றார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கில் பரவி தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கைச் சூழலைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தையும் பறித்துக் கொண்டு மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து தமிழக மக்களைக் காக்க ஒரு துளியும் நடவடிக்கை இல்லை.
கரோனா காலத்தில் டெண்டர் விடுவதிலும் அதைத் திறப்பதிலுமே குறியாக இருக்கும் முதல்வர் பழனிசாமி அரசின் நடவடிக்கை தமிழக மக்களுக்குத் தெரியாமல் இல்லை.
கரோனா பேரிடர் காலத்தைத் தங்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதி மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளில் கிருமி நாசினி தெளிப்பது வரை ஊழல் செய்து கொண்டு இருப்பவர்கள் இன்னும் சில மாதங்களில் தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டு தாங்கள் செய்த தவறுகளுக்கு தண்டனை பெறப் போவது உறுதி.
அதிகார ருசியைக் கடைசி காலத்திலும் ஒவ்வொரு சொட்டும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் வீட்டுக்குப் போகும் நாள் விரைந்து வருவதைக் கண்டு நடுங்குதுயர் கொண்டதன் விளைவே அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் அறிக்கை.
எதிர்கட்சித் தலைவர் விடுக்கும் ஆக்கப் பூர்வமான யோசனைகளைக் கேட்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட கூட்டமுடியாது என்று கூறி அறிக்கை எனும் பெயரில் அடிப்பொடிகளை விட்டு அக்கப்போர் செய்யாமல் எஞ்சியிருக்கும் நாட்களிலாவது தமிழக மக்களைத் துயரக்கடலில் தள்ளிவிடாமல் ஆட்சி நடத்த முதலமைச்சர் பழனிசாமி அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.